தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2025-ம் ஆண்டு ஒருவரிடம் பணம் கேட்டு அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்த காளியப்பன் (வயது 30) என்பவரை திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
மேலும் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி காளியப்பன் மீது ஏற்கனவே ஆறுமுகநேரி காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் போலீசார் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் மேற்சொன்ன திருச்செந்தூர் காவல் நிலைய கொலை மிரட்டல் வழக்கில் போலீசார் அவரை நேற்று முன்தினம் (2.2.2026) திருச்செந்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
மேற்சொன்ன வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிதம்பரம் நேற்று முன்தினம் காளியப்பன் என்பவரை குற்றவாளி என தீர்ப்பளித்து 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.
மேற்சொன்ன பிரபல சரித்திர பதிவேடு குற்றவாளி தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் இருக்கும் போது, குற்றவாளியின் மற்றொரு வழக்கில் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த திருச்செந்தூர் உட்கோட்ட டி.எஸ்.பி. மகேஷ்குமார், இந்த வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த திருச்செந்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் இன்னோஷ்குமார், திருச்செந்தூர் காவல் நிலைய காவல்துறையினர், நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் வனிதா ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.