மாவட்ட செய்திகள்

வீட்டில் கொள்ளை போன நகை 72 பவுன்

திருப்பதிசாரம் அருகே வீட்டில் கொள்ளை போன நகை 72½ பவுன் என்று இத்தாலியில் இருந்து திரும்பிய உரிமையாளர் போலீசில் புகார் செய்தார்.

ஆரல்வாய்மொழி,

திருப்பதிசாரம் அருகே வீட்டில் கொள்ளை போன நகை 72 பவுன் என்று இத்தாலியில் இருந்து திரும்பிய உரிமையாளர் போலீசில் புகார் செய்தார்.

பூட்டு உடைப்பு

நாகர்கோவில் அருகே திருப்பதிசாரம் வசந்தம் நகர் ஆற்றங்கரை சாலையை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 53), வெல்டர். இவர் குடும்பத்துடன் இத்தாலியில் வசித்து வருகிறார். அவ்வப்போது ஊருக்கு வந்து சல்வது வழக்கம்.

இதனால் வீட்டை பார்த்து கொள்வதற்காக, கார் செட்டை நண்பர் திவாகர் என்பவருக்கு வாடகைக்கு விட்டு இருந்ததாக கூறப்படுகிறது. திவாகர் அந்தப்பகுதியை காய்கறி வைக்கும் குடோனாக பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவும் திறந்து கிடந்தது. இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசுக்கும், இத்தாலியில் இருக்கும் கந்தசாமிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. முதலில் 70 பவுன் நகை கொள்ளை போனதாக கூறப்பட்டது.

72 பவுன் நகை

ஆனால் வீட்டின் உரிமையாளர் கந்தசாமி வந்தால்தான் உண்மையான தகவல்தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில் கந்தசாமி தனது மனைவி ரோஜா சுதாவுடன் (43) நேற்று முன்தினம் இத்தாலியில் இருந்து வந்தார்.

அவர் வந்த பிறகு தான் கொள்ளை போனது 72 பவுன் நகை என்று தெரிய வந்தது. இதுபற்றி ஆரல்வாய்மொழிபோலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஒடித்து போடப்பட்ட வளையல்

அதே சமயம் கொள்ளையர்கள் தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டு செல்லும்போது 9 தங்க வளையல்களை மீண்டும் பயன்படுத்த முடியாதபடி வளைத்து ஒடித்து போட்டுவிட்டு சென்றுள்ளனர். ஒருவேளை கவரிங் வளையல் என்று நினைத்து ஒடித்து போட்டனரா? எதற்காக இவ்வாறு செய்துள்ளனர் என்று தெரியவில்லை.

என் கணவர் கடந்த 28 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு சம்பாதித்த நகையையெல்லாம் கொள்ளையடித்து சென்று விட்டனரே என்று ரோஜா சுதா கண்ணீருடன் தெரிவித்தார்.