நாகர்கோவில்,
மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் (இயற்கை எரிவாயு) எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் போராட்டம் வலுவடைந்து வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோழிப்போர்விளை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கல்லூரி மாணவ- மாணவிகள், இளைஞர்- இளம்பெண்கள் என ஏராளமானோர் கோழிப்போர்விளை தூய மிக்கேல் அதிதூதர் ஆலய பங்குத்தந்தை பபியான்ஸ் தலைமையில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
ரத்து செய்ய வேண்டும்
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தால் விவசாய நிலம் பாதிக்கப்படும். குடிநீர், பாசனநீர் கிடைக்கும் நிலத்தடி நீர்பிடிப்புகள் வற்றிப்போகும். கடல்நீர் உட்புகும். கட்டிடங்கள் சிதையும், நிலம் உள்வாங்கும். பசுமையான வயல்வெளிகள் பாலைவனமாக மாறும். நிலங்கள் சுடுகாடாக மாறும். தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டம் பாதிப்படையும்.
எனவே நமது இயற்கை வளங்களை நாமும் அனுபவித்து, நமது சந்ததிகளும் அனுபவிக்க விவசாய பகுதிகளில் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டாம் என்றும், இத்திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
திடீர் போராட்டம்
முன்னதாக கலெக்டர் அலுவலக வாயில் அருகே அமைந்துள்ள கொடிமர பகுதியில் கல்லூரி மாணவ- மாணவிகள் திடீரென அமர்ந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகவும், இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரியும் கோஷங்களை எழுப்பி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்துக்கு மதுவில்லா தமிழகம் அமைப்பின் நிர்வாகி டேவிட்ராஜ், மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு (விடுதலை) மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து, சுரேஷ் சாமியார் காணி ஆகியோரும் ஆதரவு தெரிவித்து மாணவர்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேறு சில கோரிக்கைகளுக்காக கலெக்டரை சந்திக்க வந்திருந்த எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின் (தி.மு.க.), பிரின்ஸ், ராஜேஷ்குமார் (காங்கிரஸ்) ஆகியோரும் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த மாணவ- மாணவிகளுடன் பேசினர். அப்போது மாணவ- மாணவிகளின் கோரிக்கைகளுக்கு தாங்களும் ஆதரவு தெரிவிப்பதாக கூறிவிட்டு சென்றனர்.
இந்த போராட்டம் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக நடந்தது. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு நிலவியது.
குப்பைக்கிடங்கால் துர்நாற்றம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி செயலாளர் மேசியா மற்றும் பலர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
பத்மநாபபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சி சார்பில் லாரிகள் மூலம் எடுத்து சென்று விலவூர் பேரூராட்சி மருந்துக்கோட்டை சாலை அருகே குப்பைக்கிடங்கில் கொட்டப்படுகிறது. இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு, சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. அடிக்கடி இந்த குப்பைகளில் தீப்பிடித்து எரிவதால் அதில் இருந்து எழும் புகையால் சுற்றுப்புற பகுதி மக்கள் பெரும் அவகுதிக்குள்ளாகிறார்கள்.
எனவே பொதுமக்கள் நலன் கருதி மருந்துக்கோட்டை குப்பை கிடங்கை மாற்றி அமைத்து பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மறுசுழற்சி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மகனை காணவில்லை
நாகர்கோவில் கோட்டார் வடலிவிளை வயல்கரை பகுதியை சேர்ந்தவர் தேவதாஸ் (வயது 76). இவர் நேற்று மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு (விடுதலை) மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்துவுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது மகன் ஸ்வீட்லினை கடந்த சில நாட்களாக காணவில்லை. சில போலீஸ் அதிகாரிகள் அவனை சட்டவிரோதமாக கைது செய்து வைத்திருக்கலாம் அல்லது அவனது எதிரிகள் அவனை சட்டவிரோதமாக கடத்தியிருக்கலாம். அவனது செல்போனும் சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது. அவனிடம் ரூ.27 ஆயிரம் இருந்தது. கடந்த 2-ந் தேதி மதியம் எனது மகன் வீட்டில் சாப்பிட்டு சென்றதற்கு பிறகு காணவில்லை. எனவே எனது மகனை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கொட்டாரம் வட்டக்கோட்டை ரோடு பெரியவிளையை சேர்ந்த உலகநாதன் மற்றும் அப்பகுதி மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில்,அகஸ்தீஸ்வரம் தாலுகா கொட்டாரம் கிழக்கு கிராமத்துக்கு உட்பட்ட விவசாய நிலங்களில் அனுமதி இன்றி கட்டிடம் கட்டுவதாகவும், அதனை தடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.