தஞ்சாவூர்,
தஞ்சையை அடுத்த ராமநாதபுரம் ஊராட்சியில் உள்ளது வனதுர்கா நகர். இந்த பகுதி மக்களுக்கு ஆழ்குழாய் கிணறு மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஆழ்குழாய் கிணற்றிலும் தண்ணீர் இல்லாதால் பொதுமக்கள் கடந்த 3 நாட்களாக குடிநீர் தட்டுப்பாட்டால் பெரிதும் அவதிப்பட்டனர்.
எனவே ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் நேற்று வனதுர்கா நகரை சேர்ந்த பொதுமக்கள் 25க்கும் மேற்பட்டவர்கள் தஞ்சை மருத்துவகல்லூரி சாலையில் உள்ள ஈஸ்வரிநகர் பஸ் நிறுத்தத்திற்கு வந்தனர்.
பின்னர் அங்கு திடீரென காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன் மற்றும் மருத்துவகல்லூரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.