கோவை
4 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச்சென்ற வழக்கில் இன்னும் துப்புதுலங்கவில்லை. 3 பேரை பிடிக்க கேரளா, கோவா ஆகிய மாநிலங்களில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
கோவை ராஜவீதியில் உள்ள ஒரு ஓட்டல் கட்டிடத்தின் வளாகத்துக்குள் ஸித்தி ஜூவல்லரி என்ற நகைக்கடையில் கடந்த 2ந்தேதி கொள்ளை நடைபெற்றது. மாலை 4 மணி அளவில் கடை உரிமையாளர் சந்திரசேகர் வீட்டுக்கு சென்று இருந்தார். அப்போது பெண் ஊழியர்கள் 2 பேர் மட்டும் கடையில் இருந்தனர். அப்போது திடீரென்று கடைக்குள் 3 பேர் புகுந்தனர். முகத்தை கைக்குட்டையால் மறைத்து கட்டி இருந்தனர். கத்திமுனையில் பெண் ஊழியர்களை மிரட்டி ஒரு இடத்தில் உட்காரவைத்துவிட்டு கடையில் இருந்த 4 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச்சென்றனர். இவற்றின் மதிப்பு ரூ.1 கோடியாகும்.
நகைக்கடை உரிமையாளர் சந்திரசேகரின் கார் டிரைவர் ரியாசுதீன்(வயது 25) கூட்டாளிகளை அழைத்து வந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அந்த பகுதியில் பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டது. ரியாசுதீனுடன் தலைமறைவான ஆசாமிகள் கோவையை சேர்ந்த அசாருதீன்(25), பைசல்(24) என்றும் தெரியவந்தது.
உதவி கமிஷனர் ஜனார்த்தனன், இன்ஸ்பெக்டர் பஞ்சலிங்கம் மற்றும் தனிப்படை போலீசார் 3 பேரையும் பிடிக்க பல்வேறு இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். இருந்தாலும் இந்த கொள்ளை வழக்கில் இன்னும் துப்புதுலங்கவில்லை. போலீஸ் துணை கமிஷனர் லட்சுமி தலைமையில் இந்த வழக்கு குறித்து நேற்று ஆய்வு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் தனிப்படை போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தலைமறைவான ஆசாமிகள் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து இருப்பதும், அவர்கள் ஏற்கனவே பயன்படுத்திய செல்போன்களை உபயோகப்படுத்தப்படாமல் இருப்பது குறித்தும் தனிப்படையினர் தெரிவித்தனர். தலைமறைவான ஒவ்வொரு ஆசாமியையும் தனித்தனியாக கண்காணிக்கவும், அவர்கள் யார்யாரிடம் தொடர்பு வைத்துள்ளனர்? வேறு போன்களில் இருந்து பேசுகிறார்களா? என்று சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் தீவிரமாக கண்காணிக்குமாறும் துணை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.
தலைமறைவான 3 ஆசாமிகளும் கேரளா அல்லது கோவா மாநிலங்களில் பதுங்கி இருக்கலாம் என்று போலீஸ் அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். எனவே அந்த மாநிலங்களில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நகைக்கடைகளில் நகைகளை விற்க வருகிறார்களா? என்றும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, நகையை கொள்ளையடித்த 3 பேரும் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார்கள். அவர்களது செல்போன், முகநூல் மற்றும் வாட்ஸ்அப் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. விரைவில் பிடிபடுவார்கள் என்று தெரிவித்தனர்.