மாவட்ட செய்திகள்

மூவேந்தர் முன்னணி கழக நிர்வாகி கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு.

நெல்லை

மூவேந்தர் முன்னணி கழக நிர்வாகி கொலை

நெல்லையை அடுத்த மேலநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மகன் சிவசாமி(வயது 45). இவர் மூவேந்தர் முன்னணி கழக தென்மண்டல அமைப்பாளாக பொறுப்பு வகித்து வந்தார். இவர் கடந்த 14.7.2009 அன்று காலையில் நடைபயிற்சி சென்று விட்டு மேலப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டு இருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல் சிவசாமியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.

6 பேர் கைது

இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஏற்கனவே நடந்த ஒரு கொலை வழக்கில் சிவசாமி சாட்சியாக சேர்க்கப்பட்டு இருந்ததும், அதனால் ஏற்பட்ட தகராறில் சிவசாமி வெட்டிக் கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது.

இந்த வழக்கு தொடர்பாக மேலநத்தத்தை சேர்ந்த பிச்சாண்டி(24), பாபு, கலைச்செல்வன், இசக்கிதுரை, நம்பிராஜன், சண்முகவேல் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. கைது செய்யப்பட்ட 6 பேரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

தலைமறைவு


வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருந்தபோது ஜாமீனில் இருந்த பிச்சாண்டி தலைமறைவாகி விட்டார். இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்த சண்முகவேல் உடல் நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார். மீதி உள்ள 4 பேர் மீதும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. வழக்கை நீதிபதி விசாரித்து 27.7.2013 அன்று தீர்ப்பு கூறினார்.

பாபுவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், கலைச்செல்வன், இசக்கிதுரை, நம்பிராஜன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்கள் இந்த தீர்ப்பை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் மேல்முறையீடு செய்துள்ளனர். அந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை நடந்து வருகிறது.

கைது

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பிச்சாண்டியை கடந்த ஆண்டு சென்னையில் போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். பிச்சாண்டி மீதுள்ள வழக்கு விசாரணை தனியாக நெல்லை மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

இதையொட்டி பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து அழைத்து வந்து பிச்சாண்டியை கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். சிவசாமி கொலையில் பிச்சாண்டிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி குணசேகரன் நேற்று தீர்ப்பு கூறினார்.

இதையடுத்து அவரை போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மேகலா கென்னடி ஆஜராகி வாதாடினார்.