மாவட்ட செய்திகள்

தக்கலை அருகே பரிதாபம், மனைவி கொலை வழக்கில் ஜாமீனில் வந்த கொத்தனார் தற்கொலை

தக்கலை அருகே மனைவியை கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வந்த கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பத்மநாபபுரம்,

தக்கலை அருகே நெங்கச்சிவிளை பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 55), கொத்தனார். இவருடைய மனைவி சந்திரகலா. இவர்களுக்கு சபிதா(22) என்ற மகள் உள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தர்மலிங்கம், மனைவி சந்திரகலாவை கொலை செய்தார். இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தர்மலிங்கம் சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு தர்மலிங்கத்தின் உறவினர் ஒருவர் அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால், அவர் அழைப்பை ஏற்று பேசவில்லை. அதைத்தொடர்ந்து உறவினர், தர்மலிங்கத்தின் வீட்டுக்கு வந்து கதவை தட்டினார். வெகுநேரம் ஆகியும் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த அவர் ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது, தர்மலிங்கம் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர், இதுகுறித்து தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தர்ம லிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மலிங்கம் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.