மாவட்ட செய்திகள்

பெங்களூரு வடக்கு மண்டலத்தில் போதைப்பொருள் விற்றவர்கள் உள்பட 38 பேர் கைது - 18 கிலோ கஞ்சா, ஹசீஷ் ஆயில் பறிமுதல்

பெங்களூரு வடக்கு மண்டலத்தில் போதைப்பொருள் விற்றவர்கள் உள்பட 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 18 கிலோ கஞ்சா மற்றும் ஹசீஷ் ஆயில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

பெங்களூருவில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையை அடியோடு ஒழிக்கவும், விற்பனையாளர்களை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், பெங்களூரு வடக்கு மண்டலத்தில் போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் பயன்படுத்துவோரை கைது செய்ய போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். சோழதேவனஹள்ளி போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வினய்குமார் (வயது 22) என்பவரை கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுபோல, ஆர்.எம்.சி.யார்டு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்த அருண், மகாதேவ் என்று தெரிந்தது. அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 2 பேரும் பணம் சம்பாதிக்கும் ஆசையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதே ஆர்.எம்.சி.யார்டு போலீசார் கஞ்சா விற்பனையாளரான தீபன்(24) என்பவரை கைது செய்து, 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

இதுபோன்று, ஜாலஹள்ளி பகுதியில் உள்ள ஒரு கல்லூரி அருகே போதைப்பொருள் விற்பனை செய்ய சிலர் முயற்சிப்பதாக ஜாலஹள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் ஹசீஷ் எனப்படும் போதை ஆயில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, தவனீஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 600 மில்லி லிட்டர் ஹசீஷ் ஆயில் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதவிர வடக்கு மண்டலத்தில் உள்ள 12 போலீஸ் நிலைய போலீசார், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பயன்படுத்தியதாக 33 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் மீது 12 போலீஸ் நிலையங்களில் 30 வழக்குகள் பதிவாகி உள்ளது. ஒட்டு மொத்தமாக வடக்கு மண்டல போலீசார், போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்படுத்தியதாக 38 பேரை கைது செய்ததுடன், 18 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்திருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.