மாவட்ட செய்திகள்

கர்நாடகத்தில் கோடையில் மின்சார தட்டுப்பாடு ஏற்படாது

கர்நாடகத்தில் கோடையில் மின்சார தட்டுப்பாடு ஏற்படாது என்று மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கோடையில் மின்சார தட்டுப்பாடு ஏற்படாது என்று மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

கர்நாடக மின்சாரத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கர்நாடகத்தில் மின்சார உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளோம். மின்சார தேவையை விட கூடுதலாக ஆயிரம் மெகாவாட் மின்சாரம் நம்மிடம் உள்ளது. அதனால் கோடையில் கர்நாடகத்தில் மின்சார தட்டுப்பாடு ஏற்படாது. கூடுதலாக உள்ள மின்சாரத்தை தொழிற்சாலைகளுக்கு வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.

மாநிலத்தில் ஒவ்வொரு மாதமும் மின் உற்பத்தி அதிகரித்து வருகிறது. வரும் காலத்தில் மின் தேவை அதிகரிக்கும்போது அதை சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த சிவராத்திரி தினத்தன்று அதிகபட்ச உச்சமாக 10 ஆயிரத்து 242 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. நிலைமை இவ்வாறு இருக்கும்போது கோடையிலும் எந்த பிரச்சினையும் இன்றி மின்சாரத்தை வினியோகம் செய்வோம்.

மின் வினியோகத்தில் ஏற்படும் குறைபாடுகளை போக்க தாலுகா அளவில் சூரியசக்தி மின்சார உற்பத்தி செய்ய வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். இதன் மூலம் 2,200 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். சூரியசக்தி மின்சார உற்பத்தி திட்டத்தை அமல்படுத்துவதில் நடந்த முறைகேடுகளில் தொடர்புடைய என்ஜினீயர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சட்ட விரோதமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது சட்டப்படியே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் முடிவை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்துள்ளது. இந்த விஷயத்தில் முதல்மந்திரி சித்தராமையா அடுத்தகட்ட முடிவு எடுப்பார். பாவகடாவில் சூரியசக்தி மின்சார உற்பத்தி நிலையம் அமைப்பதில் சிறிய ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

இதில் சில தவறுகள் நடந்துள்ளன. இதுதொடர்பாக பாவகடாவில் சில வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. சட்டத்தை கையில் எடுக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம். அங்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

இவ்வாறு மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.