மாவட்ட செய்திகள்

மேல்-சபையில் பா.ஜனதா கடும் அமளி; சபை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

ராகுல் காந்தியின் சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்-சபையில் பா.ஜனதா கடும் அமளியில் ஈடுபட்டது. சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மும்பை,

மராட்டிய சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. வீர சாவர்க்கர் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியதை கண்டிக்கும் வகையில் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் காவி தொப்பி அணிந்து வந்தனர். மேலும் இது தொடர்பாக சட்டசபையில் பிரச்சினையை கிளப்பியதால் சபையில் அமளி ஏற்பட்டு சபை 10 நிமிடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல மேல்-சபையிலும் ராகுல்காந்தியின் சர்ச்சை பேச்சுக்கு எதிராக பாரதீய ஜனதா புயலை கிளப்பியது. சபையின் மையப்பகுதிக்கு சென்று அந்த கட்சி உறுப்பினர்கள் ராகுல்காந்திக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அப்போது பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் குரல் எழுப்பினர். மேல்-சபை தலைவர் ராம்ராஜே நிம்பல்கர் அமளியில் ஈடுபட்ட பாரதீய ஜனதா உறுப்பினர்களை அவர்களது இருக்கைக்கு செல்லும்படி கூறினார். ஆனால் அவர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் சபையை நாள் முழுவதும் அவர் ஒத்தி வைத்தார்.

முன்னதாக மேல்-சபையில் புதிதாக பதவியேற்ற சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவுக்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.