மாவட்ட செய்திகள்

தியாகதுருகத்தில் கார்கள் மோதி விபத்து; வக்கீல் பலி

தியாகதுருகத்தில் கார்கள் மோதிய விபத்தில் வக்கீல் பரிதாபமாக இறந்தார்.

கண்டாச்சிமங்கலம்,

காஞ்சீபுரம் மாவட்டம் தாம்பரம் சானடோரியம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகள் ஜெயஸ்ரீ (வயது 23). இவர் சேலத்தில் உள்ள மத்திய சட்டக் கல்லூரியில் வக்கீலுக்கு படித்து முடித்துள்ளார். இதற்கான சான்றிதழை பெற கல்லூரிக்கு காரில் புறப்பட்டு சென்றார். காரை அவரே ஓட்டியுள்ளார்.

தியாகதுருகம் புறவழிச்சாலையில் பிரிதிவிமங்கலம் மேம்பாலத்தில் சென்ற போது, முன்னால் சென்ற வாகனத்தை முந்திச்செல்ல முயன்றார். அப்போது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக ஜெயஸ்ரீ ஓட்டிச்சென்ற கார் மீது மோதியது.

இந்த விபத்தில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ஜெயஸ்ரீ பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் தியாகதுருகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த ஜெயஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக சென்னை பட்டாளம் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் கிஷோர் (27) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.