திருவள்ளூர்,
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வரவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்த ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பின் சார்பில் நேற்று தலைமைச்செயலகம் நோக்கி பேரணி நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.
கைது
இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் திருவள்ளூரில் பஸ், வேன், ரெயில் மூலம் சென்னை செல்வதற்கு தயாரானார்கள். அவர்களை திருவள்ளூரில் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.
திருமண மண்டபம் முன்பு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினார்கள். அவர்களை 1 மணி நேரத்துக்கு பின்னர் போலீசார் விடுவித்தனர். இது தொடர்பாக திருத்தணியில் 45 பேரை கைது செய்த போலீசார் பின்னர் விடுவித்தனர்.