மங்களூரு:
கர்நாடகத்தில் கோர்ட்டுகளில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வரும் வழக்குகள் தொடர்பாக லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றங்கள் மூலம் விசாரணை நடத்தி அதில் தீர்வு காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் கர்நாடக மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மாவட்டங்களில் உடுப்பி, குந்தாப்புரா, கார்கலா உள்பட பலபகுதிகளில் உள்ள கோர்ட்டுகளில் கடந்த 13-ந் தேதி சனிக்கிழமை அன்று லோக் அதாலத் நடைபெற்றது.
இந்த லோக் அதாலத் மூலம் 20,444 வழக்குகளில் தீர்வு காணப்பட்டன. இதில் சமரசமாக பேசி 34 வழக்குகளும், செக் தொடர்பாக 226 வழக்குகளும் தீர்த்து வைக்கப்பட்டன. பணம் தொடர்பாக 24 வழக்குகளில், திருமண பிரச்சினை தொடர்பாக 2 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டது. 115 சிவில் வழக்குகள், 1,501 பிற குற்ற வழக்குகளில் தீர்வு காணப்பட்டது.
இந்த கோர்ட்டில் 13 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த தம்பதியை நீதிபதிகள், வழக்கறிஞர்கள் தலையீடு செய்து அவர்களுக்கு அறிவுரைகள் கூறி சேர்த்து வைத்தனர். மேலும், சொத்து பங்கீடு தொடர்பாக உறவினர்களுக்கு இடையே 35 ஆண்டுகளாக இருந்து வந்த வழக்கிலும் தீர்வு காணப்பட்டது. திருமண தகராறு தொடர்பாக 2 தம்பதிகள் இணைத்து வைக்கப்பட்டனர்.