திருவாரூர்:-
திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் இணைய வழியில் பதிவு செய்து கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்பனை செய்யலாம் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இணையதளம்
மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின்கீழ் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து கொண்டு நெல் விற்பனை செய்ய ஏதுவாக, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள e-DPC இணைய முறையில் சம்பா கொள்முதல் பருவம் 2022-ல் விவசாயிகள் தங்களுடைய பெயர், ஆதார் எண், புல எண், வங்கிக்கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை www.tncsc.tn.gov.in அல்லது www.tncsc-edpc.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்முதல் செய்ய வேண்டிய தேதியினை முன்பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
தேர்வு செய்து கொள்ளலாம்
மேற்கண்ட இணையதளத்தில் எதிர் வரும் சம்பா பருவத்துக்கு இணையவழி பதிவு முறையின் மூலம் விவசாயிகள் பதிவு செய்து, தாங்கள் வசிக்கும் கிராமங்களின் அருகாமையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தாங்களே தேர்வு செய்து கொள்ளலாம். நெல் கொள்முதலுக்கு தேவையான வருவாய் ஆவணங்களை (பட்டா, சிட்டா மற்றும் அடங்கல்) இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அவ்வாறு பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தின் பெயர், நெல் விற்பனை செய்யப்படும் நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் அனுப்பப்படும்.
ஒத்துழைப்பு
நீண்டநேரம் காத்திருக்காமல் குறித்த காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்து பயன்பெற்று, இந்த இணையவழி பதிவு திட்டத்திற்கு அனைத்து விவசாயிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மேலும், கூடுதல் விவரங்களுக்கு திருவாரூர் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலத்தை 04366222542 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.