நொய்யல்,
கரூர் வடிவேல் நகர் 3-வது கிளாஸ் ஈரோடு மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது 50). இவரது மகன் சபரி (27). இருவரும் வேலாயுதம்பாளையம் பகுதிக்கு வந்து விட்டு மீண்டும் சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். தளவாபாளையம் பிரிவு பகுதியில் ஒரு வாத்து கடை அருகே சென்று கொண்டிருந்தபோது இவர்களுக்கு பின்னால் கட்டிபாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், சபரி ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தந்தையும், மகனும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து 2 பேரும் சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், வெள்ளியங்கிரி மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் 16 வயது சிறுவன் மீது வழக்குப்பதிந்து, அவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.