மாவட்ட செய்திகள்

100 சதவீத பயிர் காப்பீட்டுத்தொகையை வழங்க வலியுறுத்தி - விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

திருவாடானையில் 100 சதவீத பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு அலுவலக வாசலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொண்டி,

திருவாடானை, ஆர்.எஸ். மங்கலம் வட்டார விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் 2018-19-ம் ஆண்டிற்கு 100 சதவீத பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி திருவாடானை தெற்கு தெருவில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என போராட்ட குழு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதையொட்டி தெற்கு தெருவில் பெரிய அளவில் கொட்டகை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் 144 தடை அமலில் இருப்பதால் போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து போராட்டத்திற்கு அமைக்கப்பட்ட கொட்டகை திடீரென அகற்றப்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை ஏராளமான பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான விவசாயிகள் அங்கு குவிந்தனர். அதனை தொடர்ந்து திறந்த வெளியில் அமர்ந்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போரட்டத்தை வலியுறுத்தி ஒரு சிலர் மட்டும் பேசிய நிலையில் திடீரென மின்சாரம் தடை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு தாலுகா அலுவலகத்தை முற்றுகை யிட்டனர். அதன் பின்னர் அலுவலக வாசலில் தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது தாசில்தார் மாதவன், போலீஸ் துணை சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் ஆகியோர் போராட்டக்குழு பிரதிநிதிகளை அழைத்து கோரிக்கையை மனுவாக அளித்தால் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர். அதற்கு விவசாயிகள் 117 வருவாய் கிராமங்களுக்கு 2018- 19-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகை 100 சதவீதம் வழங்குவதாக உறுதி அளித்து விட்டு தற்போது 25 சதவீதம் மட்டுமே பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு உள்ளது. எனவே 100 சதவீத பயிர் காப்பீட்டு தொகையை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைத்தால் மட்டுமே இந்த இடத்தில் இருந்து செல்வோம். இல்லையெனில்விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும் வரை இங்கேயே தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் கூறியதுடன் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் சப்- கலெக்டர் சுகபுத்ரா திருவாடானைக்கு வந்து தாலுகா அலுவலகத்தில் போராட்ட குழு பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அவர், இன்சூரன்ஸ் கம்பெனி செயற்கைகோள் குறிப்பிட்டுள்ளபடி 25 சதவீதம் மட்டுமே வழங்க முடியும் என அறிவித்து அதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு பணம் வழங்கி உள்ளது.இதனை மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் ஏற்றுக்கொள்ளவில்லை.தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறது. 100 சதவீத காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்ல வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.ஆனால் விவசாயிகள் அதனை ஏற்க மாட்டோம் என்றும் முழுமையான தொகையை வழங்கும் வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் கூறி தொடர்ந்து போரரட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராம லிங்கம், மாநில விவசாய அணி துணை செயலாளர் நல்ல சேதுபதி, திருவாடானை யூனியன் தலைவர் முகம்மது முக்தார், தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் திவாகரன், அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் வ.து.ந.ஆனந்த், ஒன்றிய செயலாளர்கள் சரவணன், ரவி, மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் விஸ்வநாதன், அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் ரெத்தினமூர்த்தி, சி.பி.எம், மாவட்ட குழு உறுப்பினர் முத்துராமு, சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பிரபு உள்பட பலவேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருவாடானை, ஆர்.எஸ் மங்கலம் வட்டார விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவினர் செய்து இருந்தனர்.