மாவட்ட செய்திகள்

ரேஷன் கடைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு அனுப்பும் பணி தீவிரம்

கடலூரில் ரேஷன் கடைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கடலூர்,

பொங்கல் பண்டிகை வருகிற 14-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ வெல்லம், கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வருகிற ஜனவரி 3-ந் தேதி முதல் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம், திட்டக்குடி, வேப்பூர் ஆகிய தாலுகாக்களில் உள்ள 1,424 ரேஷன் கடைகள் மூலம் 7 லட்சத்து 48 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

பொட்டலம் தயார்

இதையொட்டி கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில் மற்றும் சிதம்பரம் ஆகிய பகுதிகளில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் பொங்கல் பரிசு தொகுப்புக்காக பொட்டலம் தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இதில் பொட்டலமாக தயார் செய்யப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பு, நேற்று நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து சரக்கு வாகனம், மினி லாரி மற்றும் லாரிகளில் ஏற்றப்பட்டு, அவை அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

இந்த பொங்கல் பரிசு தொகுப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டு வருகிறது. மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு, வீடாக சென்று பொதுமக்கள் எந்தெந்த நாளில் எந்தெந்த நேரத்தில் கடைகளுக்கு சென்று பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்ற விவரத்தை தெரிவித்து டோக்கன் வழங்கப்பட்ட பிறகே, ரேஷன் கடைக்கு சென்று பொதுமக்கள் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுச்செல்லலாம் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.