1. எனது கணவர் ஒரு வருடத்துக்கு முன்பு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டார். தற்போது குணமான நிலையில், தொடர்ந்து அதை நினைத்தே கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறார். இதை எவ்வாறு சரி செய்வது?
முதலில் உங்கள் கணவர் தனது உடல்நிலை குறித்து பயப்படுகிறாரா? அல்லது எச்சரிக்கை உணர்வோடும், விழிப்புணர்வோடும் இருக்கிறாரா? என்று நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நீரிழிவு நோயை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது. உணவு முறை, மருந்து, உடற்பயிற்சி மற்றும் அன்றாட வாழ்வில் மனஅழுத்தம் ஏற்படாதவகையில் நடந்துகொள்வது போன்ற செயல்களின் மூலம், நீரிழிவை கட்டுப்படுத்த மட்டுமே முடியும்.
மேலே குறிப்பிட்டவற்றை கடைப்பிடிப்பதற்கு முயற்சிப்பதன் காரணமாக, அவர் எப்போதும் விழிப்புணர்வு நிலையிலேயே இருக்கலாம். இது உங்களுக்கும் புதியதாக தோன்றலாம்.
தகுந்த மருத்துவரை அணுகி, உங்கள் கணவரின் உடல்நிலை குறித்து ஆலோசனை பெறுங்கள். செய்யவேண்டியவை, செய்யக் கூடாதவை குறித்து தெரிந்துகொள்ளுங்கள். இதன் மூலம் தெளிவு கிடைக்கும். அதற்கு பின்னரும் அவரது நிலை இதைபோன்றே தொடர்ந்து இருந்தால், தயங்காமல் மனநல மருத்துவரை அணுகுங்கள்.
2. நான் காதல் திருமணம் செய்தவள். எனது முதல் மகன் சிறப்புக் குழந்தை. என் உதவி இன்றி அவனால் எதுவும் செய்ய முடியாது. அவன் பிறந்ததில் இருந்து கணவர் என்னிடமோ, மகனிடமோ பெரிதாக அன்பு காட்டுவதில்லை. குடும்பத்தையும் கவனிப்பதில்லை. எனது தேவைகளுக்காக, தாய் வீட்டில் இருந்து பண உதவி செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் எனக்கு இரண்டாவது மகன் பிறந்தான். அவன் ஆரோக்கியமாக இருக்கிறான். இப்போதும் எனது கணவர் எந்த வகையிலும் குடும்பத்திற்கு உதவுவது இல்லை. நான் பட்டப்படிப்பு முடித்திருந்தாலும், குழந்தைகளை கவனித்துக்கொள்ள வேண்டி இருப்பதால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. தற்போது, எனது தாய் வீட்டில் கொடுத்த ஆதரவும் படிப்படியாக குறைந்து வருகிறது. என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறேன். எனக்கு நல்ல வழி காட்டுங்கள்.
உங்கள் முதல் குழந்தைக்கு சிறப்புத் தேவைகள் இருப்பதால், நீங்கள் வெளியே சென்று வேலை செய்ய முடியாமல் போகலாம். இருப்பினும் வீட்டில் இருந்து வேலை செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்க உதவும் வணிக வாய்ப்புகள் நிறைய உள்ளன.
உங்கள் பெற்றோரிடம் இருந்து பண உதவி பெறுவதை நிறுத்துங்கள். அவர்களிடமிருந்து வேறு வகையான உதவியைக் கோர முடியுமா என்பதைப் பார்க்கவும். உதாரணமாக, நீங்கள் வேலையில் ஈடுபட்டிருக்கும்போது உங்கள் குழந்தைகளில் ஒருவரை உங்கள் அம்மா கவனித்துக்கொள்ள முடியுமா? என்று கேட்டுப்பாருங்கள். உங்கள் கணவரை எதிர்பார்க்காமல் குடும்ப பொறுப்புகளை நீங்கள் கையில் எடுத்து செயல்படுத்துங்கள்.
நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? உங்கள் திட்டம் என்ன? என்பதை அவருக்கு எடுத்துக்கூறுங்கள். இதில் தன் பங்குக்கு அவரால் என்ன செய்ய முடியும்? என்று கேளுங்கள். குடும்பத்தை நீங்கள் உங்களது கட்டுப்பாட்டில் நிர்வகிக்க ஆரம்பித்துவிட்டீர்கள் என்று உணர்ந்தபின்பு, அவர் நிச்சயம் அதற்கு எதிர்வினையாற்றுவார். அது நல்லதா? கெட்டதா? என்பதைப்பொறுத்து, அவர் மீதான அடுத்த செயல்பாட்டில் ஈடுபடுங்கள்.
வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். தங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி,
தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி,
சென்னை - 600007.
மின்னஞ்சல்: devathai@dt.co.in