மாவட்ட செய்திகள்

வெவ்வேறு பகுதிகளில் அமைக்க உள்ள 3 டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு

வெவ்வேறு பகுதிகளில் அமைக்க உள்ள 3 டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து

வேலூர்,

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் புகார்களை மனுவாக எழுதி கொடுத்தனர். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார்.

காந்திய மக்கள் இயக்கம் சார்பில் கொடுத்துள்ள மனுவில், அரக்கோணம் தாலுகா செம்பேடு ஊராட்சி சோகனூர் கிராமத்தில் 50 ஏக்கரில் சமூகநல காடு உள்ளது. இங்கு, மண் கடத்தப்படுவதால் 50 ஏக்கரில் இருந்த சமூகநலக் காடு 30 ஏக்கர் பரப்பளவாக குறைந்துவிட்டது. 20 ஏக்கர் பரப்பளவில் உள்ள மண்ணை பொக்லைன் எந்திரம் மூலம் 6 முதல் 10 அடி ஆழத்திற்கு மர்ம நபர்கள் எடுத்து கடத்திச் செல்கின்றனர். எனவே, மண் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

வேலூர் வள்ளலார் குடியிருப்பு நலச்சங்கம் சார்பில் சாய்நாதபுரம் பொதுமக்கள், முன்னாள் கவுன்சிலர் உஷாராணி தலைமையில் கொடுத்துள்ள மனுவில், வேலூர் சாய்நாதபுரம் வள்ளலார் விரிவு பகுதியில் டி.கே.எம். மகளிர் கல்லூரி, கிருஷ்ணசாமி முதலியார் மேல்நிலைப்பள்ளி மற்றும் குழந்தைகள் விளையாட்டு பூங்கா, குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் குடியிருப்பு பகுதிக்குள் டாஸ்மாக் கடை ஒன்று புதிதாக அமைக்கப்பட உள்ளது. டாஸ்மாக் கடை வந்தால் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்காது. மாணவ மாணவிகளுக்கு குடிமகன்களால் தொந்தரவு ஏற்படும். எனவே, இதுகுறித்து கலெக்டர் ராமன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

பொன்னை கெங்குசாமி நாயுடு மெட்ரிக்பள்ளி மாணவர்கள் சுமார் 25க்கும் மேற்பட்டோர் கொடுத்துள்ள மனுவில் எங்கள் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறோம். நாங்கள் படிக்கும் பள்ளி, கால்நடை ஆஸ்பத்திரிக்கு செல்லும் சாலையில் உள்ளது. இந்த நிலையில், வேறு பகுதியில் அகற்றப்படும் டாஸ்மாக் கடையை எங்களது பள்ளிக்கு அருகாமையில் இடமாற்றம் செய்ய முயற்சி நடந்து வருகிறது. டாஸ்மாக் கடையை பள்ளிக்கு அருகே அமைக்க கூடாது என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதேபோல, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பில் அடுக்கம்பாறை அடுத்த சின்ன சப்தல்லிபுரத்தை சேர்ந்த கிராம மக்கள் கொடுத்துள்ள மனுவில் சப்தல்லிபுரத்தில் மனநலம் குன்றிய மாணவ, மாணவிகளுக்கான பள்ளி மற்றும் அரசு உதவி பெரும் மேல்நிலைப்பள்ளி என 2 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளுக்கு அருகில் டாஸ்மாக் கடையை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இங்கு டாஸ்மாக் கடை திறந்தால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும். மேலும் குடிமகன்கள் தொல்லையும் ஏற்படும். எனவே, டாஸ்மாக் கடையை அமைக்க மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அரசு பொது இசேவை மையத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் கொடுத்துள்ள மனுவில் நாங்கள் பொது இசேவை மையத்தில் கணினி ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறோம். எங்களுக்கு கடந்த 13 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. இதுகுறித்து ஏற்கனவே மனு அளித்துள்ளோம். மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே, இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மக்கள் குறை தீர்வு கூட்டம் காயிதே மில்லத் அரங்கத்தில் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது பகல் 12 மணி அளவில் கூட்ட அரங்கின் கதவு மூடப்பட்டது. அரங்கினுள் அரசு அதிகாரிகளுக்கான அலுவலக பணிகள் குறித்த கூட்டம் நடைபெற்றது. மனுகொடுக்க வந்த பொதுமக்கள் கதவின் வெளியே காத்துக் கொண்டிருந்தனர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்கள் காத்திருந்ததால் ஆத்திரம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் பொதுமக்களுக்கான இக்கூட்டத்தில் அரசு அதிகாரிகள் கூட்டம் நடத்த கூடாது பொதுமக்களிடம் அனைத்து மனுக்களை பெற்றுக் கொண்ட பின் அதிகாரிகளுக்கான கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி பேராட்டம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பொதுமக்களிடம் தொடர்ந்து மனுக்கள் வாங்கப்பட்டன.