திருச்சி,
மாநகர் மாவட்ட அ.தி.மு.க.
திருச்சி புத்தூர் ஆபீசர்ஸ் காலனியில் உள்ள திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நேற்று முன்னாள் முதல்அமைச்சர் ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அலுவலக வாசலில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா படத்திற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பத்மநாதன், பகுதி செயலாளர்கள் பூபதி, முஸ்தபா, அன்பழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இதே போல் திருச்சி நகரின் பல இடங்களிலும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அ.தி.மு.க. கொடி ஏற்றி ஜெயலலிதா பிறந்த நாளை கொண்டாடினார்கள்.
முன்னதாக நேற்று முன்தினம் இரவு மாநகர் மாவட்ட அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன், அமைச்சர் வளர்மதி ஆகியோர் மாற்றுத்திறனாளிகளுக்கு கிரைண்டர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
திருச்சி அரசு பார்வையற்றோர் பள்ளியில் நடந்த ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் தலைமையில் மாணவிகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.