நெல்லை,
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சு அவிழும் வரை தர்மயுத்தம் தொடரும் என்று நெல்லையில் நடந்த அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணி செயல்வீரர்கள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
நெல்லை மாவட்ட அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணி சார்பில், அ.தி.மு.க. நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, கழக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி தேர்தல் குறித்து செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டை கோர்ட்டு எதிரே உள்ள மைதானத்தில் நேற்று மாலை நடந்தது.
வக்கீல் பிரிவு முன்னாள் செயலாளர் மனோஜ் பாண்டியன் தலைமை தாங்கினார். மனோகரன் எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார். நெல்லை புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் ஏ.கே.சீனிவாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி, பேசினார்.
முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், முன்னாள் அமைப்பு செயலாளர் நாராயண பெருமாள், பாளையங்கோட்டை பகுதி முன்னாள் செயலாளர் எஸ்.டி.காமராஜ் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் முன்னாள் முதல்அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
மறைந்த முதல்அமைச்சர் ஜெயலலிதா 45 ஆண்டு காலம் காவல் தெய்வமாக இருந்து அ.தி.மு.க.வை எக்கு கோட்டையாக, தொண்டர்களின் இயக்கமாக உருவாக்கி உள்ளார். இங்கு கூடியிருக்கிற கூட்டம் நெல்லை, இனிமேல் அவர்களுக்கு இல்லை என்பதை நிரூபித்துக் காட்டி விட்டது.
எம்.ஜி.ஆர். கட்சியை தொடங்கிய போது உடனிருந்த தலைவர்கள், தொண்டர்கள் இன்று நம்பக்கம் இருக்கின்றனர். இந்த இயக்கத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்கு இங்கு கூடி உள்ளனர். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு 27 ஆண்டுகள் ஆண்ட பெருமை அ.தி.மு.க.வுக்கு மட்டுமே உள்ளது. இந்த பெருமையை அடைவதற்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவோடு சேர்ந்து உழைத்தவர்கள் இன்று நம்முடன் உள்ளனர். இருபெரும் தலைவர்களின் கொள்கையால் கட்சி இத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்துள்ளது. அவர்கள் தொண்டர்களின் இயக்கமாக அ.தி.மு.க.வை வளர்த்து உள்ளனர்.
ஆனால் இன்று நிலைமை வேறு விதமாக உள்ளது. ஆட்சி யாரிடம் உள்ளது என்பதை மக்களாகிய நீங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள். இந்த சூழ்நிலையில் தி.மு.க. எதிர்பார்த்து காத்துக் கிடக்கிறது. எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்று ஸ்டாலின் காத்து கிடக்கிறார்.
2011ம் ஆண்டு சசிகலா உள்பட அவரது குடும்பத்தினர் 16 பேரை ஜெயலலிதா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கிவிட்டார். 3 மாதம் கழித்து சசிகலா திரும்பி வந்த போது, ஜெயலலிதா உதவியாளராக மட்டுமே சேர்த்துக் கொண்டார். அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்கள், ஜெயலலிதா மரணம் வரை கட்சியில் சேர்க்கப்படவில்லை. ஆனால் அவர்கள் தற்போது பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர் ஆகிக் கொண்டனர். அத்தகைய துர்பாக்கிய நிலை ஏற்பட்டு விட்டது.
அத்தகைய கும்பலிடம் இருந்து கட்சியை காப்பாற்றவே இந்த தர்ம யுத்தம் நடக்கிறது. ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சு அவிழும் வரை இந்த தர்ம யுத்தம் தொடரும் என்று நாட்டு மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று நடப்பது ஜெயலலிதாவின் அரசு கிடையாது. ஜெயலலிதாவின் திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. ஜெயலலிதா முதல்அமைச்சராக இருந்த போது தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்காக 96 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டார். அதில் எத்தனை தொழில்கள் தொடங்கப்பட்டு உள்ளன. ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் அனைத்தும் கைவிடப்பட்டு விட்டன.
ரூ.7 ஆயிரம் கோடியில் சென்னை பகுதிக்கு வரவேண்டிய, 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டிய தொழிற்சாலை, ஆந்திரா மாநிலத்துக்கு போய்விட்டது. அம்மா உணவகம் சரியாக இயங்கவில்லை. அங்கு வழங்கப்படும் உணவு தரமாக இல்லை என்று புகார் வருகிறது. அம்மா குடிநீர் தாராளமாக கிடைக்கவில்லை. தமிழகத்தில் நடக்கும் பிரச்சினைகளுக்கு அரசு தீர்வு காண்பதில்லை. ஆட்சியாளர்கள் வேடிக்கை பார்க்கின்றனர். இதுதான் தமிழக அரசின் நிலைமை ஆகும்
இந்த அரசுக்கு மக்கள் மீது அக்கறை இருந்தால் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். சசிகலாவின் பினாமி ஆட்சி உள்ளாட்சி தேர்தலை நடத்துமா? உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தல், பாராளுமன்ற தேர்தல் என எந்த தேர்தல் வந்தாலும் ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் நமது தலைமையில் அமையும் என்பதை நெல்லை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நிரூபித்து விட்டது. அத்தகையை நிலமை கூடிய விரைவில் வரும்.
சென்னையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பெரிய அளவில் நடைபெற உள்ளது. அதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அதில் கருத்தரங்கு, கவியரங்கமும் நடைபெறும். எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கிய போது உறுதுணையாக இருந்த பலரது குடும்பங்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகழ் சரித்திரத்தில் இடம் பெறும் வகையில் அந்த விழா நடத்தப்படும். மேலும் அன்று ஜெயலலிதாவுக்கு சிலை நிறுவப்படும்.
ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைப்பதே நமது லட்சியம். அதற்கு அனைவரும் ஒன்று படுவோம், வெற்றி பெறுவோம். நாம்தான் உண்மையான அ.தி.மு.க. என்பதை நிரூபிப்போம்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
கூட்டத்தில் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், ஜெயபால், எம்.பி.க்கள் மைத்ரேயன், பி.ஆர்.சுந்தரம், ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, பாண்டியராஜன், சண்முகநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. பிரபாகர்,
முன்னாள் எம்.எல்.ஏ. முத்துச்செல்வி, புறநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் டென்சிங் சுவாமிநாஸ், கடையம் ஒன்றிய முன்னாள் செயலாளர் ஜீவா, சேரன்மாதேவி ஒன்றிய துணை செயலாளர் கணபதி, புறநகர் மாவட்ட மாணவர் அணி துணை செயலாளர் சிங்கிகுளம் சுரேஷ், பாளையங்கோட்டை வக்கீல் அணி துணைத்தலைவர் ஜெனி, உவரி முன்னாள் கிளை செயலாளர் எஸ்.டி.ஆர்.செல்வகுமார், பணகுடி நகர பஞ்சாயத்து முன்னாள் செயலாளர் ஜி.டி.லாரன்ஸ், மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் லாசர், மராட்டிய மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமராஜ், இளைஞர் இளம்பெண்கள் பாசறை பொருளாளர் பாலரிச்சர்ட், மீனவர் பிரிவு தலைவர் சூசை வியாகுலம், மருத்துவ அணி தலைவர் மணிமாறன், வள்ளியூர் ஒன்றிய அவைத்தலைவர் செல்வராஜ், களக்காடு ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ராஜேந்திரன், நாங்குநேரி ஒன்றிய முன்னாள் செயலாளர் சூரியகுமார், களக்காடு நகர செயலாளர் நல்லாசிரியர் செல்வராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.