மாவட்ட செய்திகள்

சோலைமலை முருகன் கோவிலில் திருக்கல்யாண விழா கந்தசஷ்டி பெருந்திருவிழா நிறைவு

சோலைமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவையொட்டி நேற்று திருக்கல்யாண திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து கோவிலில் கந்தசஷ்டிதிருவிழா நிறைவு பெற்றது.

அழகர்கோவில்,

அழகர்மலை உச்சியில் உள்ள முருகப்பெருமானின் ஆறாவதுபடை வீடான சோலைமலை முருகன் கோவிலில் கடந்த 20-ந்தேதி கந்த சஷ்டி பெருந்திருவிழா தொடங்கியது. அதில் தினமும் அன்னம், காமதேனு, யானை, ஆட்டுகிடாய், சப்பரம், குதிரை வாகனங்களில் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து சூரசம்ஹார விழா நடந்து முடிந்தது.

திருவிழாவின் நிறைவு நாளான நேற்று திருக்கல்யாண திருவிழா நடந்தது. இதையொட்டி காலையில் சஷ்டி மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் எழுந்தருளினார். திருமண சீர்வரிசைகள் மணமேடைக்கு கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க வள்ளி, தெய்வானைக்கு முருகப்பெருமான் மாங்கல்யம் சூட்டுவதும், மணமாலைகள் அணிவிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடந்தன.

இதில் ஏராளமான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்தனர். தொடர்ந்து திருப்பாவாடை தரிசனமும் மாலையில் சாமி புறப்பாடும், ஊஞ்சல் சேவையும், மஞ்சள் நீர் உற்சவமும் நடந்தது. மூலவர் சன்னதி முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்குள்ள மூலவர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது.

நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜூ, கோவில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து, திருப்பரங்குன்றம் கோவில் அதிகாரி கவிதா பிரியதர்சினி மற்றும் முருக பக்த சபை சுப்பையா செட்டியார், கோவில் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து கோவிலில் நடைபெற்று வந்த கந்தசஷ்டி பெருந்திருவிழா நிறைவு பெற்றது. திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம் உள்பட கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

திருமங்கலத்தில் உள்ள குமரன்கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நடைபெற்றது. அதையொட்டி முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் உள்ள சூரசம்ஹார பொட்டலில் நடந்தது. தொடர்ந்து நேற்று கோவில் வளாகத்தில் விநாயகர் சன்னதி அருகே உள்ள சஷ்டி மண்டபத்தில் முருகப்பெருமான், தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் கோவிலுக்கு மொய் எழுதினர். இதேபோல சொக்கநாதர் மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள முருகன் சன்னதியிலும், மாரியம்மன் கோவிலில் உள்ள முருகன் சன்னதியிலும் கந்தசஷ்டி விழா நடைபெற்றது.

சோழவந்தான் அருகே உள்ள தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதசாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சூரசம்ஹார லீலை நடைபெற்று நேற்று காலை பாவாடை தரிசனம், மாலையில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் திருமணக் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவு சாமி வீதி உலா நடந்தது. இந்த நிகழ்ச்சியை பேராசிரியர் மீனாட்சிநாகசுந்தரம் தொகுத்து அளித்தார். ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம், பிரதோஷ கமிட்டியினர் செய்திருந்தனர்.