மாவட்ட செய்திகள்

விக்கிரமசிங்கபுரத்தில் பரிதாபம் உடலில் மண்எண்ணெய் ஊற்றி 9–ம் வகுப்பு மாணவி தற்கொலை போலீசார் விசாரணை

விக்கிரமசிங்கபுரத்தில் உடலில் மண்எண்ணெய் ஊற்றி 9–ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விக்கிரமசிங்கபுரம்,

விக்கிரமசிங்கபுரத்தில் உடலில் மண்எண்ணெய் ஊற்றி 9ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

9ம் வகுப்பு மாணவி

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 48). இவர் ஊரில் பாத்திர கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி இந்திரா. இவர் பொட்டல்புதூரில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு பிருந்தா, சினேகா ஆகிய மகள்கள் உண்டு. பிருந்தா பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியிலும், சினேகா ஒரு தனியார் பள்ளிக்கூடத்திலும் 9ம் வகுப்பு படித்து வந்தார். சினேகா நேற்று முன்தினம் பள்ளிக்கூடத்திற்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு வந்தாள். வீட்டின் மாடியில் உள்ள தனது அறையில் இரவில் தூங்கச் சென்றாள்.

இந்த நிலையில் நேற்று காலையில் முருகேசன் கடைக்கும், இந்திரா பள்ளிக்கூடத்திற்கும், பிருந்தா கல்லூரிக்கும் சென்று விட்டனர். வீட்டில் சினேகாவுக்கு துணையாக அவரது வயதான பாட்டி மட்டும் இருந்துள்ளார். அவரும் வீட்டின் கீழே உள்ள அறையில் இருந்துள்ளார்.

உடல் கருகிய நிலையில் பிணம்

காலையில் முருகேசன் வீட்டில் இருந்து புகைவெளியேறியது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து கதவை தட்டினார்கள். ஆனால் கதவை யாரும் திறக்கவில்லை. இதுகுறித்து உடனடியாக முருகேசனுக்கு செல்போன் மூலம் அவர்கள் தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து வீட்டை திறந்தார். பின்னர் அனைவரும் உள்ளே சென்றனர். மாடியில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அனைவரும் மாடிக்கு சென்றனர்.

அங்கு சினேகாவின் அறையின் கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் கதவை திறக்க முடியவில்லை. பின்னர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. அந்த அறையில் சினேகா உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தாள். மகளின் உடலை பார்த்து முருகேசன் கதறி அழுதது பரிதாபமாக இறந்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து இந்திராவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வந்து மகளை பார்த்து கதறி அழுதார்.

தற்கொலை

இதுகுறித்து உடனடியாக விக்கிரமசிங்கபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் அகிலா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மாணவியின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

சினேகா நேற்று காலையில் வீட்டில் உள்ள அனைவரும் வெளியே சென்ற பின்னர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்தது தெரியவந்தது. அவரது தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுதொடர்பாக விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.