புதுச்சேரி
புதுவை காவல்துறையில் புதிதாக பயிற்சி முடித்து வந்துள்ள போலீசார் காவல்நிலையங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களில் 20 ஆண்கள், 15 பெண்கள் என 35 பேர் புதுவை கிழக்கு பகுதி போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் சிக்னல்கள், முக்கிய சாலை சந்திப்புகள், போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவது, பொதுமக்களுக்கு உதவுவது, முதியவர்கள் சாலையை கடக்க உறுதுணையாக இருப்பது என அவர்களின் பணிகள் நாள்தோறும் கண்காணிக்கப்படுகின்றன. இதை கொண்டு அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
அதாவது சிறந்த செயல்பாட்டாளர் என்ற தலைப்பில் சம்பந்தப்பட்ட காவலரின் பெயர், படம் ஆகியன காவல்நிலைய அறிவிப்பு பலகையில் தினமும் வைக்கப்படுகிறது. இது புதிதாக பணியில் சேர்ந்த போலீசார் மத்தியில் ஊக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. போக்குவரத்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரிஜேந்தர் குமார் யாதவ் உத்தரவின்பேரில் போலீஸ் சூப்பிரண்டு மாறன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.