கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அரசலாறு வழிநடப்பு பகுதியை சேர்ந்தவர் சாரங்கன். இவருடைய மனைவி உமாராணி. இவர்களது மகள் ஓவியா(வயது15). இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவி ஓவியாவுக்கு கடந்த 19-ந் தேதி திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவரை கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பரிதாப சாவு
மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் ஓவியாவின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் ஓவியாவை சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவி ஒருவர் இறந்த சம்பவம் கும்பகோணம் பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.