முத்துப்பேட்டை:-
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள கரையங்காடு கிராமத்தை சேர்ந்தவர் விஜயபாலன். இவர் தொண்டியக்காடு ஊராட்சி மன்ற செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ஆனந்தி (வயது25). இவர்களுக்கு 5 வயதில் ஆண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் ஆனந்தி தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் திருத்துறைப்பூண்டி சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். கல்லுக்குடி அருகே வந்தபோது ஆனந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் ஆனந்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி ஆனந்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து எடையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.