பெங்களூரு,
ஊழியர் கைது
பெங்களூருவில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனம் தங்களது வணிக வரி தொடர்பான ஆவணங்களை வணிக வரி துறையிடம் ஆன்லைன் மூலம் செலுத்தி வந்தது. கடந்த 3 மாதங்களாக இந்த நிறுவனம் வணிக வரி ஆவணங்களை அனுப்பவில்லை. இதனால், வணிக வரி ஆவணங்களை ஆன்லைனில் அனுப்புவதற்கு வசதியாக நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட பயனர் பெயர் (யூசர் நேம்), கடவுச்சொல் (பாஸ்வேர்டு) ஆகியவை ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில், ரத்து செய்யப்பட்ட பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை மீண்டும் வழங்கும்படி நிறுவனம் சார்பில் வணிக வரித்துறைக்கு கோரிக்கை விடப்பட்டது.
இந்த வேளையில், பயனர் பெயர், கடவுச்சொல்லை மீண்டும் வழங்க ரூ.8 ஆயிரத்தை லஞ்சமாக இந்திரா நகர் வணிக வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியரான (தட்டச்சர்) சீனிவாச மூர்த்தி, தனியார் நிறுவன ஊழியரிடம் கேட்டார். பின்னர், இருவருக்கும் நடந்த பேச்சுவார்த்தையில் ரூ.5 ஆயிரமாக லஞ்சப்பணம் குறைத்து கொள்ளப்பட்டது. இருப்பினும் லஞ்சம் கொடுக்க விரும்பாத தனியார் நிறுவன ஊழியர், பெங்களூரு ஊழல் தடுப்பு படையில் புகார் செய்தார். ஊழல் தடுப்பு படை அதிகாரிகள் அறிவுரைப்படி ரசாயன பொடி தடவிய ரூ.5 ஆயிரத்தை தனியார் நிறுவன ஊழியர், சீனிவாச மூர்த்தியிடம் நேற்று கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்து இருந்த ஊழல் தடுப்பு படையினர் சீனிவாச மூர்த்தியை கைது செய்தனர்.
இதேபோல், கதக் மாவட்டம் சிரஹட்டி தாலுகா லஷ்மேஸ்வரத்தில் வசித்து வரும் விவசாயிக்கு நில உரிமை பத்திரம் வழங்குவதற்காக பெண் கிராம கணக்காளர் நூர்ஜகான் நேற்று ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கினார். அப்போது, அங்கு மறைந்து இருந்த ஊழல் தடுப்பு படை அதிகாரிகள் நூர்ஜகானை கைது செய்தனர்.