மாவட்ட செய்திகள்

கோலார் தங்கவயலில் லட்சுமி வெங்கடரமண சாமி கோவில் தேரோட்டம்

கோலார் தங்கவயலில் உள்ள லட்சுமி வெங்கடரமண சாமி கோவிலில் நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோலார் தங்கவயல்:

லட்சுமி வெங்கடரமண சாமி கோவில்

கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை கீதா சாலையில் பிரசித்தி பெற்ற லட்சுமி வெங்கடரமண சாமி கோவில் அமைந்துள்ளது. மாநில அரசின் அறநிலையத்துறைக்கு கீழ் இந்த கோவில் செயல்பட்டு வருகிறது. இந்த கோவிலில் ஆண்டுதாறும் மார்ச் மாதத்தில் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 13 நாட்கள் நடக்கும் இந்த பிரம்மேற்சவத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு சமூகத்தினர் விழா நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரானா பரவல் காரணமாக பிரம்மோற்சவம் நடைபெறவில்லை. கோவில் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி எளிமையாக பிரம்மோற்சவம் நடந்தது. இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்துள்ளதால், லட்சுமி வெங்கடரமண கோவிலில் பிரம்மோற்சவம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 12-ந்தேதி பிரம்மோற்சவம் தொடங்கியது.

144 தடை உத்தரவு

பிரம்மோற்சவம் தொடங்கியது முதல் தினமும் ஒவ்வொரு சமூகத்தினர் விழா நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், 18-ந்தேதி (நேற்று) அரசு சார்பில் பிரம்ம ரத உற்சவம் எனும் தேரோட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஹிஜாப் வழக்கில் ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியதால், அசம்பாவித சம்பவங்களை தடுக்க 21-ந்தேதி வரை கோலார் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதனால் கடந்த 2 ஆண்டுகளை போலவே, இந்த ஆண்டும் பிரம்ம ரத உற்சவம் பக்தர்கள் இன்றி கோவில் வளாகத்தில் எளிமையாக நடக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், பாதுமக்கள் 2 ஆண்டுகளுக்கு பிறகு பிரம்ம ரத உற்சவம் நடப்பதால், அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

அதன்படி, தங்கவயல் தொகுதி எம்.எல்.ஏ. ரூபாகலா சசிதர், போலீஸ் சூப்பிரண்டு தாரணி தேவியை சந்தித்து, அரசு சார்பில் நடக்கும் பிரம்ம ரத உற்சவத்தை எளிமையாக நடத்தக்கூடாது என்றும், பொதுமக்களின் விருப்பத்திற்கேற்ப நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதையடுத்து லட்சுமி வெங்கடரமண சாமி கோவில் பிரம்ம ரத உற்சவம் என்னும் தேரோட்டத்தை நடத்த போலீஸ் சூப்பிரண்டு அனுமதி வழங்கினார். மேலும் தேரோட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்றும் போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

தேரோட்டம் நடந்தது

அதன்படி நேற்று கோலார் தங்கவயல் லட்சுமி வெங்கடரமண சாமி கோவிலில் பிரம்ம ரத உற்சவம் என்னும் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து சாமி தரிசனம் செய்தனர். இந்த தேர், கோவிலில் இருந்து புறப்பட்டு கீதா ரோடு, முதலாவது கிராஸ், பிரிசர்ட் ரோடு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

இந்த தேரோட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பிரம்மோற்சவத்தின் சிகர நிகழ்ச்சியான புஷ்ப பல்லக்கு ஊர்வலம் வருகிற 22-ந்தேதி நடக்கிறது.