மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் அருகே நிலங்களை டிரோன்கள் மூலம் கணக்கிட்டு பதிவு

திருவள்ளூர் அருகே நிலங்களை டிரோன்கள் மூலம் கணக்கிட்டு பதிவு செய்யும் பணி தொடங்கியது.

திருவள்ளூர்,

மத்திய அரசின் ஸ்வமித்வா நத்தம் நில அளவை திட்டத்தின் கீழ் தமிழகத்தில் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் தண்டலம் ஊராட்சி மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் கடம்பத்தூர் ஒன்றியம் பிரயாங்குப்பம் கிராமம் என 2 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து தண்டலம் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் பார்வையிட்டு நில அளவை பணிகளை மேற்கொண்டனர்.

இந்த திட்டத்தில் ஏற்கனவே உள்ள நத்தம் பகுதிகள், தற்போதுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு எல்லை நிர்ணயம் செய்யும் பணி நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து பிரயாங்குப்பம் ஊராட்சியில் மத்திய குழுவினர் முகாமிட்டு ஊராட்சி பகுதியில் அரசு நிலங்கள் கண்காணிக்கப்பட்டு நில அளவீடு செய்யும் பணியை தொடங்கினார். பணிகளை ட்ரோன்கள் மூலம் படம் பிடிக்கும் பணி நடைபெற்றது.

இதில் தமிழக நில அளவை பதிவேடுகள் துறை இயக்குனர் டி.ஜி.வினய் தலைமையில், இந்திய நில அளவை பதிவேடுகள் துறையை சேர்ந்த உதவி இயக்குனர் சந்தோஷ், சர்வே அதிகாரி மஞ்சுநாத், தமிழக நில அளவை பதிவேடுகள் துறை துணை இயக்குனர்கள் ராமச்சந்திரன், வெங்கடேஷ், திருவள்ளூர் மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குனர் குமாரவேல், வட்டார வளர்ச்சி அலுவர்கள் ராம்குமார், வெங்கடேசன், பிரயாங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி சங்கர், கலைஞர்தாசன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து, தமிழக நில அளவை பதிவேடுகள் துறை இயக்குனர் டி.ஜி.வினய் கூறியதாவது:-

இந்த திட்டத்தில் ஏற்கனவே உள்ள நத்தம் பகுதிகள், தற்போதுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு எல்லை நிர்ணயம் செய்யும் பணி நடந்து வந்த நிலையில் தற்போது டிரோன் கேமரா மூலம் படம் பிடிக்கும் பணியும் நடந்தது.

அதன்பின் அனைத்தும் இந்த திட்டத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்படும். அதன்பின் குடியிருப்புகளில் கிராம மக்களுக்கு சொத்து அட்டை என்ற அடையாள அட்டை வழங்கப்படும். இந்த சொத்து அட்டை கிராம மக்கள் பட்டா வாங்குவதற்கும், வங்கிகளில் கடன் பெறவும் பயன்படுத்தலாம்.

இதேபோல் ஊராட்சி பகுதியில் நத்தம் பகுதிகளில் தற்போதைய நிலை அறிந்து கொள்ள முடியும்.

அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் முன்மாதிரி கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்ட கடம்பத்துர் ஒன்றியம் பிரையாங்குப்பம் ஊராட்சி கிராமத்தில் எந்த பகுதியில் சாலை, ஊராட்சி மன்ற அலுவலகம், குடியிருப்புகளுக்கு எல்லை நிர்ணயம் செய்தல் போன்றவை குறியிடப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.