மாவட்ட செய்திகள்

லாரி செட் மேற்பார்வையாளர், மோட்டார் சைக்கிளில் வைத்து இருந்த ரூ.70 ஆயிரம் திருட்டு

தூத்துக்குடியில் லாரி செட் மேற்பார்வையாலர் மோட்டார் சைக்கிளில் வைத்து இருந்த ரூ.70 ஆயிரத்தை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி முத்தம்மாள் காலனியை சேர்ந்தவர் சுப்புராஜ். இவருடைய மகன் திருவடிசாமி(வயது 35). இவர் தூத்துக்குடி மடத்தூர் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு தனியார் லாரி செட்டில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலையில் லாரிகளுக்கு டீசல் போடுவதற்காக ரூ.70 ஆயிரம் பணத்தை, மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்க் கவரில் வைத்துக் கொண்டு அலுவலகத்துக்கு புறப்பட்டார்.

அவர் ஜோதிநகர் விலக்கு பகுதியில் வந்த போது, சிறுநீர் கழிப்பதற்காக மோட்டார் சைக்கிளை ரோட்டோரத்தில் நிறுத்தி விட்டு சென்றாராம். சிறிது நேரத்தில் திரும்பி வந்த போது, மோட்டார் சைக்கிள் கவரில் வைத்து இருந்த பணத்தை யாரோ மர்ம நபர் திருடி சென்று இருப்பது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து, குறிப்பிட்ட நேரத்தில் அந்த வழியாக சென்ற நபர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.