பெங்களூரு:
கே.ஆர்.எஸ். அணை
கர்நாடகத்தில் உள்ள முக்கிய அணைகளில் ஒன்றாக கருதப்படுவது கிருஷ்ணராஜசாகர் அணை. இந்த அணையை சுருக்கமாக கே.ஆர்.எஸ். என்று அழைக்கிறார்கள். இந்த அணை மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் அமைந்துள்ளது. கர்நாடகா மற்றும் தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களின் உயிர்நாடியாக விளங்கும் காவிரி ஆற்றின் குறுக்கே இந்த அணை அமைந்துள்ளதால், இதற்கு மிகப்பெரும் பெயரும் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழையின்போது கே.ஆர்.எஸ். அணை நிரம்புவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலம் முடிந்த பிறகும் கே.ஆர்.எஸ். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு மாவட்டம் மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் மழை வெளுத்து வாங்கியது.
124.80 அடியை எட்டியது
இதனால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து இருந்து வருகிறது. இதன்காரணமாக இந்த ஆண்டு கே.ஆர்.எஸ். அணை தொடர்ந்து 3 முறை தனது முழுகொள்ளளவான 124.80 அடியை எட்டி பிரம்மிக்க வைத்தது. மேலும் கடந்த மாதம்(நவம்பர்) 2-ந் தேதி அளவில் மீண்டும் கே.ஆர்.எஸ். அணை தனது முழு கொள்ளளவான 124.80 அடியை எட்டியது. அதன்பிறகு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து இருந்து வருகிறது.
நேற்று காலை நிலவரப்படியும் அணைக்கு வினாடிக்கு 2,299 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 4,467 கன அடி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டு உள்ளது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து இருந்து வருவதால் கே.ஆர்.எஸ். அணை தனது முழுகொள்ளளவான 124 அடியிலேயே தொடர்ந்து இருந்து வருகிறது.
53 நாட்களாக...
கடந்த 53 நாட்களாக கே.ஆர்.எஸ். அணை தனது முழு கொள்ளளவு நிலையிலேயே இருந்து வருகிறது. கடந்த 90 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் இவ்வாறு 53 நாட்களாக அணை முழுகொள்ளளவில் நீடித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று காலை நிலவரப்படி அணையில் 124.28 அடி அளவில் நீர் இருந்தது. அணையில் நேற்று 48.726 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி நீர்) தண்ணீர் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.