கர்நாடகா ,
கன்னட திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் (வயது 46) அக்டோபர் 30 ஆம் தேதி பெங்களூருவில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவர் மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார்-பர்வதம்மா தம்பதியின் இளையமகன் ஆவார். அவரது இந்த மரணம் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமா உலகையே சோக கடலில் ஆழ்த்தியது.
பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கவர்னர் கெலாட், கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்பட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், என பலர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இருந்தனர்.
கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் நேரில் வந்து, புனித் ராஜ்குமாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா உள்பட மந்திரிகள் பலர் நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.புனித் ராஜ்குமாரின் உடல் கன்டீரவா ஸ்டூடியோவில் உள்ள அவரது பெற்றோர் நினைவிடம் அருகிலேயே 21 குண்டுகள் முழங்க அரசு முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த கந்தட குடி படத்தின் டீசர் இன்று வெளியானது. இந்த படத்தை அமோகவர்சா இயக்கியுள்ளார். புனித் ராஜ்குமாருக்கு மிகவும் நெருக்கமான இந்த திரைப்படம் நிலம் மற்றும் இயற்கையின் முக்கியத்துவத்தை பற்றி பேசுவதாக அமைந்துள்ளது .
இந்த படத்தின் டீசரை புனித் ராஜ்குமாரின் சகோதரர் சிவராஜ்குமார் மற்றும் கேஜிஎப் புகழ் யாஷ் இன்று காலை டுவிட்டரில் வெளியிட்டனர். இது குறித்து புனித ராஜ்குமாரின் நெருங்கிய நண்பர் யாஷ் கூறும்போது ," கந்தட குடி எனது நண்பன் புனித ராஜ்குமாரின் கனவு திரைப்படம் என தெரிவித்தார்.
இந்த திரைப்படம் அடுத்த வருடம் திரையரங்கில் வெளியாகிறது. புனித ராஜ்குமாரை மீண்டும் ஒருமுறை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.