மாவட்ட செய்திகள்

எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பாளையங்கோட்டையில் எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை:

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து நேற்று நாடு முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்கள் இணைந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டத்தை சேர்ந்த எல்.ஐ.சி. ஊழியர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான எல்.ஐ.சி. ஊழியர்கள் பணிக்கு வராததால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. பாளையங்கோட்டையில் உள்ள கோட்ட அலுவலகம் நேற்று பணியாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. அங்குள்ள பணியாளர்கள் வேலையை புறக்கணித்துவிட்டு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

தலைவர் முத்துக்குமாரசாமி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பொன்னையா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். எல்.ஐ.சி. தொழிலாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் பட்டன், நிர்வாகிகள் மதுபால், பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் தபால்துறை ஊழியர்களும் தலைமை தபால் நிலையம் முன்பு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.