தர்மபுரி:
காரிமங்கலம் பகுதியில் விதிமுறைகளை மீறியதாக 2 உர கடைகளின் உரிமங்களை ரத்து செய்து வேளாண்மை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
உர கடைகளில் ஆய்வு
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் உர கடைகளில் வேளாண்மை தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் தாம்சன், வட்டார உர ஆய்வாளர் கனகராசு ஆகியோர் தனியார் உர கடைகளில் அரசு நிர்ணயித்த விலையில் உரம் விற்பனை செய்யப்படுகிறதா?, அரசு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது காரிமங்கலம் பகுதியில் உள்ள 2 தனியார் உர கடைகளில் உரக்கட்டுப்பாட்டு ஆணை விதிமுறைகளை மீறி உரம் விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இதை அடுத்து அந்த 2 கடைகளின் உர விற்பனை உரிமம் தற்காலிகமாக ரத்து செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
எச்சரிக்கை
தர்மபுரி மாவட்டத்தில் அரசு விதிமுறைகளை மீறி உரம் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தால் உர கடைகளின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும். மேலும் அந்த நிறுவனங்கள் மீது உரக்கட்டுப்பாட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வசந்தரேகா எச்சரிக்கை விடுத்துள்ளார்.