மாவட்ட செய்திகள்

கூடுதல் வரிச்சலுகை வழங்கக்கோரி கருவூல அலுவலகத்தில் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு கூடுதல் வரிச்சலுகை

சிவகங்கை,

கூடுதல் வரிச்சலுகைமத்திய நிதி அமைச்சகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இந்த மாதம் வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி வரி பிடித்தம் செய்யப்படும். ஆண்டு வருமானம் ரூ.2 லட்சம் வரை வரியில்லை என்றும், ரூ.2 முதல் ரூ.5 லட்சம் வரை 10 சதவீதமும், ரூ.5 முதல் ரூ.10 லட்சம் வரை 20 சதவீதமும், அதற்கு மேல் 30 சதவீதமும் வரி செலுத்த வேண்டும். இதில் வீடு, கல்விக்கடன், கல்வி கட்டணம், சேமிப்பு என ரூ.1 லட்சம் வரை வரிவிலக்கு பெறலாம். மேலும் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்துள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கூடுதலாக ரூ.50 ஆயிரம் வரிச்சலுகை பெறலாம் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த உத்தரவை ஏற்க சிவகங்கை மாவட்ட கருவூல அதிகாரி மறுத்தார். மற்ற மாவட்டங்களை போன்று புதிய ஓய்வூதிய திட்ட ஊழியர்களுக்கு கூடுதலாக ரூ.50 ஆயிரம் வரிச்சலுகை அளிக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி மனு கொடுத்தன. இந்தநிலையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்டப் பொருளாளர் குமரேசன் உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் இளங்கோ, மாவட்ட இணை செயலாளர் முத்துச்சாமி, முதுநிலை ஆசிரியர் சங்க செயலாளர் சிவக்குமார், இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் சங்கர் உள்பட ஆசிரியர்கள் சிவகங்கை மாவட்ட கருவூல அலுவலர் ராமலட்சுமியை சந்தித்து வரிச்சலுகை குறித்து முறையிட்டனர்.

அப்போது கூடுதல் வரிச்சலுகை அளிக்க வாய்மொழியாக ராமலட்சுமி தெரிவித்தார். ஆனால் இதனை ஏற்க மறுத்த ஆசிரியர்கள் எழுத்து மூலம் உத்தரவு அளிக்க வலியுறுத்தி, கருவூலத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மாவட்ட கருவூல அதிகாரி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இதனையடுத்து அவர் எழுத்து மூலம் வரிச்சலுகைக்கான உத்தரவை வழங்கினார். இதை தொடர்ந்து ஆசிரியர்கள் இந்த உத்தரவினை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்திற்கும், முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கும் கொடுத்து பள்ளிகளுக்கு அனுப்பினர்.