மாவட்ட செய்திகள்

மால்வாய் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி- பள்ளி கட்டிட பணிகள்

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த புள்ளம்பாடி ஒன்றியம் மால்வாய் கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வந்தது.

கல்லக்குடி,

இந்நிலையில் அப்பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள், சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். அக்கோரிக்கையை ஏற்று ரூ.14 லட்சம் ஒதுக்கீடு செய்து, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை செய்து, பணிகளை சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதேபோல் மால்வாய் ஊராட்சி சாதூர்பாக்கத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் பள்ளி கட்டிடம் மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்தது. இதனால் புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட வேண்டுமென்று ஆசிரியர்களும், மாணவர்களும் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ. ரூ.15.50 லட்சம் ஒதுக்கீடு செய்து, அதற்கான பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வராஜ், நகர செயலாளர் பால்துரை, பொதுக்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், மணிமாறன், மாவட்ட பிரதிநிதி கருணாநிதி, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் கோல்டன் ராஜேந்திரன், சத்யாஸ்ரீதர், ராஜமாணிக்கம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முருகன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செந்தாமரைகண்ணன் வரவேற்றார்.