மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது

கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கம்பம்:

கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்துவதாக கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கம்பம்மெட்டு சாலையில் உள்ள சிலுவை கோவில் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை போலீசார் மறித்து சோதனை மேற்கொண்டனர். அந்த மோட்டார் சைக்கிளில் இருந்த பையில் 1 கிலோ 200 கிராம் கஞ்சா கடத்தி செல்வது தெரியவந்தது. கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், கம்பம் மணி நகரத்தை சேர்ந்த சிவக்குமார் (வயது 24) என்றும், கேரளாவுக்கு கஞ்சா கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தனர்.