மாவட்ட செய்திகள்

மன்னார்குடி அருகே பரபரப்பு: மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை சுற்றி வளைத்துப்பிடித்த பொதுமக்கள்

மன்னார்குடி அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை பொதுமக்கள் சுற்றி வளைத்துப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

மன்னார்குடி:-

மன்னார்குடி அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை பொதுமக்கள் சுற்றி வளைத்துப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

மோட்டர் சைக்கிள் திருட்டு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பாமணி மேட்டுத் தெருவை சேர்ந்தவர் தாமோதரன் (வயது40). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்று சாப்பிட்டார். சாப்பிட்டு முடித்தவுடன் வாசலில் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றது தெரியவந்தது.

இதையடுத்து தாமோதரன் அந்த பகுதியை சேர்ந்தவர்களுடன் மோட்டார் சைக்கிளை தேடினார். அப்போது பாமணி உரக்கிடங்கு அருகே மர்ம நபர்கள் 2 பேர் தாமோதரனின் மோட்டார் சைக்கிளை தள்ளி சென்று கொண்டிருந்தனர்.

2 பேர் கைது

இதை பார்த்த பொதுமக்கள் அவர்கள் 2 பேரையும் சுற்றி வளைத்துப்பிடித்து மன்னார்குடி தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் பாமணி உள்ளூர் வட்டம் பகுதியை சேர்ந்த அய்யப்பன் (23), பாமணி வடக்கு தெருவை சேர்ந்த மகேஸ்வரன் (21) ஆகியோர் என்பதும், மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றதும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.