மும்பை,
மராத்திய காலக்கணக்கீட்டின்படி சைத்ர மாதத்தின் தொடக்கமாக குடிபட்வா என்ற மராட்டிய புத்தாண்டு ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன்படி மராட்டிய புத்தாண்டு இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மராட்டியர்களின் வீடுகளில் அலங்கரிக்கப்பட்ட பிரம்புகளில் பட்டு சரிகை துணிகளை கட்டி வைப்பார்கள்.
பின்னர் அதை பூ மற்றும் மாலை அலங்காரம் செய்து பிரம்பின் உச்சியில் கலசத்தை கீழ்நோக்கி வைப்பார்கள். இதனை குடி என்று அழைத்து வருகின்றனர். குடி என்றால் வெற்றிக் கம்பம் என்று பொருள். இந்த கலசம் பொருத்திய குடி பிரம்புகளை ஒவ்வொரு வீட்டின் ஜன்னல், கதவு மற்றும் மாடிகளில் அனைவரும் பார்க்கும் வகையில் வைப்பார்கள். இவ்வாறு வைக்கப்படும் குடி தீமைகளை வேரறுத்து, நற்பண்புகள் மற்றும் அதிர்ஷ்டத்தை வீட்டிற்கு கொடுக்கும் என்பது ஐதீகம். மராட்டியர்களின் வழக்கப்படி இந்த நாளில் ராமன் ராவணனைக் கொன்று சீதையுடன் அயோத்தி திரும்பினார் என்றும், அந்த நாளில் அயோத்தி மக்கள் ராமனின் வருகையை குடி (வெற்றிக்கம்பம்) நட்டு கொண்டாடியதாகவும் கூறப்படுகிறது.
வேப்பிலை
மேலும் புத்தாண்டின் தொடக்கமாக மராட்டியர்கள் வேப்பிலைகளை மென்று சாப்பிட்ட பிறகே உணவு பொருட்களை சாப்பிட தொடங்குவார்கள். இதேபோன்று வீடுகளில் ஷிர்க் கன்ட், பூரி, போரன் பூரி போன்ற பண்டங்கள் தயாரிக்கப்பட்டு ஏழை, எளிய மக்களுக்கு தானமாக வழங்கப்படும்.
புத்தாண்டு தினத்தன்று மராட்டியர்கள் பாரம்பரிய முறைப்படி உடைகள் அணிந்து பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுவார்கள்.பிரமாண்ட ஊர்வலம் நடத்துவார்கள். புத்தாண்டின் தொடக்க நாள் அதிர்ஷ்ட தினமாக மராட்டிய மக்கள் கருதுகின்றனர். எனவே இந்த நாளில் புதிய தொழில் தொடங்குதல், நகை உள்ளிட்ட அணிகலன்கள், வாகனங்கள், ஆடைகள் வாங்குவது வழக்கம். குடிபட்வாவையொட்டி நேற்று மும்பை உள்பட மாநிலம் முழுவதும் பூ உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்தது.