ஆறுமுகநேரி:
மேல ஆத்தூர் அருகே உள்ள மரந்தலை மாடசாமி கோவில் கொடை விழா 3 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் மாலையில் குடிஅழைப்பு, அதனைத் தொடர்ந்து திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. இரவில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.
2-ம் நாள் அதிகாலையில் மகா கணபதி ஹோமம், சிற்றாற்றில் இருந்து புனித நீர் எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேகம், அன்னதானம் நடந்தது. அன்னதானத்தை மேல ஆத்தூரை சேர்ந்த சென்னை தொழிலதிபர் ஜெயமுருகன் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து இரவு வில்லிசை, இரவு 12 மணிக்கு சாமக்கொடை, வாணவேடிக்கை நடைபெற்றது. மூன்றாம் நாள் காலையில் சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் பொங்கல் விடுதல் நடந்தது. பின்னர் மதியக் கொடை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கொடை விழாவில் தமிழக மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தொழிலதிபர் எஸ்.என்.ஜெயமுருகன், மேல ஆத்தூர் கிராம பஞ்சாயத்து தலைவர் சதீஷ்குமார், மற்றும் தேனி, மதுரை, பட்டிவீரன்பட்டி, சென்னை, பனையூர், வேம்பார், போடிநாயக்கனூர், மேல ஆத்தூர், புதியம்புத்தூர், தூத்துக்குடி, மதுரை, போன்ற பகுதிகளில் இருந்து பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சதீஷ்குமார், வீரக்குமார், ராஜகோபால் நாடார், போத்தி மகராஜன் நாடார், வெள்ளத்துரை நாடார் மற்றும் கமிட்டியினர் செய்திருந்தனர்.