மாவட்ட செய்திகள்

கட்டாய இலவச கல்விக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

மதுரை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டாய இலவச கல்வி உரிமைச்சட்டப்படி மாணவர்கள் சேர்க்கைக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

மதுரை,

மதுரை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டாய இலவச கல்வி உரிமைச்சட்டப்படி மாணவர்கள் சேர்க்கைக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

நாளை முதல்

மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தின் சார்பில், குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் படியான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச்சட்டப்படி, வருகிற 2022-23 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை மாவட்டத்தை சேர்ந்த அனைத்து சிறுபான்மையில்லாத தனியார் சுயநிதிப்பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினர்களின் குழந்தைகளுக்கு எல்.கே.ஜி.வகுப்பில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள 419 பள்ளிகளில் 5,362 இடங்களுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை rte.tnschools.gov.in என்ற இணையதள முகவரியில் நாளை (புதன்கிழமை) முதல் வருகிற மே மாதம் 18-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

முன்னுரிமை

மதுரை, மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி கல்வி மாவட்டங்களிலும், வட்டார கல்வி அலுவலகங்களிலும், வட்டார வள மையங்களிலும், தமிழக அரசின் இ.சேவை மையங்களிலும், அந்தந்த பள்ளிகளிலும் விண்ணப்பிக்கலாம். சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம், குழந்தையின் சாதிச்சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் நகல், தாய், தந்தையின் ஆதார் எண் அட்டை நகல் ஆகியவற்றையும், முகவரி சான்றாக ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் எண் அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றையும் இணைக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் வீட்டில் இருந்து ஒரு கி.மீ. தூரத்துக்குள் பள்ளிக்கூடம் இருக்க வேண்டும். நலிவடைந்த பிரிவினர்கள் வருமான சான்றிதழ் இணைக்க வேண்டும். அதாவது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், சீர்மரபினர், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஆகியோரும், வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினர்களில் ஆதரவற்றோர், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவு தொழிலாளியின் குழந்தை, மாற்றுத்திறனாளி குழந்தை ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பத்தில் தாய் அல்லது தந்தையின் செல்போன் எண் குறிப்பிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.