மாவட்ட செய்திகள்

மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து: சேதமடைந்த பகுதிகளை என்ஜினீயர் குழுவினர் இன்று ஆய்வு

மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்தால் சேதமடைந்த பகுதிகளை என்ஜினீயர் குழுவினர் இன்று ஆய்வு செய்கின்றனர்.

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கிழக்கு ராஜகோபுர பகுதியில் இருந்து சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியில் வீரவசந்தராயர் மண்டபமும், ஆயிரங்கால் மண்டபமும் உள்ளது. இந்த பகுதியின் இருபுறங்களிலும் 45 கடைகள் இருந்தன. இந்த கடைகளில் கடந்த 2-ந் தேதி இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 36 கடைகள் எரிந்து சாம்பலாயின.

வீரவசந்தராயர் மண்டபம் கடுமையான சேதமடைந்தது. அதன் மேற்கூரைகள் இடிந்து விழுந்தன. மேலும் அந்த மண்டபத்தில் இருந்த 32 தூண்களில் 19 தூண்கள் சேதமடைந்துள்ளன.

இந்த விபத்து குறித்து போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி விபத்தால் சேதமடைந்த கட்டிடத்தை ஆய்வு செய்து சீரமைக்க என்ஜினீயர்கள் மற்றும் ஸ்தபதிகள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர், தங்களது ஆய்வுப்பணியினை இன்று (திங்கட்கிழமை) தொடங்குகின்றனர். இவர்களின் ஆய்வுக்கு வசதியாக, இடிபாடுகளை அகற்றும் பணிகள் தொடங்கின. ஆனால் இடிபாடுகளின் கற்கள் அனைத்தும் கடும் வெப்பமாக இருந்தன. எனவே தீயணைப்பு துறை மூலம் இடிபாடுகளின் மீது தண்ணீர் தெளிக்கும் பணி நேற்று காலை முதல் மாலை வரை நடந்தது.

இதற்கிடையில் போலீசாரின் விசாரணையும் தீவிரமடைந்துள்ளது. அதில் பல்வேறு தகவல்கள் கிடைத்து வருகின்றன. அங்குள்ள ஒரு கடையை கடைசியாக அடைத்துவிட்டு வந்த கடைக்காரர் ஒருவர், திருஷ்டி கழிப்பதற்காக கற்பூரம் காட்டி உள்ளார். அந்த கற்பூரத்தின் தீ துகள்கள் தான் தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் மின்கசிவு தான் தீ விபத்திற்கு காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி, அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இங்கு ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து அருகில் உள்ள புதுமண்டபத்திலும் நேற்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அதே போல் தீ விபத்து ஏற்பட்ட கிழக்கு கோபுரத்தை தவிர மற்ற அனைத்து கோபுரங்கள் வழியாகவும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வழக்கம் போல் தரிசனம் செய்தனர்.

தீ விபத்து குறித்து மத்திய தொகுதி எம்.எல்.ஏ. பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நேற்று ஆய்வு செய்தார்.