மாவட்ட செய்திகள்

மன்னார்குடியில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் உதவி கலெக்டர் அழகர்சாமி அறிவிப்பு

மன்னார்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என உதவி கலெக்டர் அழகர்சாமி அறிவித்துள்ளார்.

மன்னார்குடி:-

மன்னார்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என உதவி கலெக்டர் அழகர்சாமி அறிவித்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்

மன்னார்குடி உதவி கலெக்டர் அலுவலகத்தில் வர்த்தக சங்க நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மன்னார்குடி உதவி கலெக்டர் அழகர்சாமி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை வருகிற 3-ந் தேதிக்குள் (திங்கட்கிழமை) சம்பந்தப்பட்ட கடைக்காரர்களே அகற்றிக் கொள்ள வேண்டும். முடியாதபட்சத்தில் 3-ந் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

பொது ஏலம்

மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். மாடுகளை சாலைகளில் திரியவிட்டு வளர்க்கக்கூடாது. வீட்டில்தான் வளர்க்க வேண்டும். சாலையில் திரியும் மாடுகள் பிடிபட்டால் உரிமையாளர்களுக்கு முதல் முறை ரூ.2 ஆயிரத்து 500, 2-ம் முறை ரூ.5 ஆயிரம் என அபராதம் விதிக்கப்படும். 3-வது முறை பிடிபட்டால் மாடு பொது ஏலத்திற்கு விடப்படும்.

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பவர்கள் முதல் முறை பிடிபட்டால் அபராதம் விதிக்கப்படும். 2-ம் முறை பிடிபட்டால் கடைக்கு சீல் வைக்கப்படும்.

அபராதம்

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் முதல் முறை அபராதம் விதிக்கப்படும். 2-ம் முறை கடைக்கு சீல் வைக்கப்படும். இந்த நடவடிக்கைகளுக்கு வர்த்தக சங்கத்தினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசந்தர், நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன், தாசில்தார் ஜீவானந்தம், நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் விஜயகுமார், வர்த்தக சங்க தலைவர் ஆனந்த், செயலாளர் அசோகன், பொருளாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.