மாவட்ட செய்திகள்

கூடலூர் வனப்பகுதியில் மிளா மானை வேட்டையாடிய 5 பேர் கைது

கூடலூர் வனப்பகுதியில் மிளா மானை வேட்டையாடிய 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

கூடலூர்,

தேனி மாவட்டம், கூடலூர் வனச்சரகர் அன்பழகன் தலைமையில் வனவர் செல்வம் மற்றும் வனத்துறையினர் வண்ணாத்திப்பாறைக்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கப்பாமடைபுலம் அருகே ஊமையன்தொழு என்னுமிடத்தில் கோபி என்பவரின் வீட்டில் மான் இறைச்சியை சமைப்பதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அங்கு வனத்துறையினர் விரைந்து சென்றனர். பின்னர் கோபி வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் மான் இறைச்சியை சமைத்து கொண்டு இருப்பது தெரிய வந்தது. அதனை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கோபியிடம் விசாரணை நடத்தினர். அதில் கோபி மற்றும் கூடலூரை சேர்ந்த ஜெகன் (வயது 45), அன்னக்கொடி (60), வெட்டுக்காட்டை சேர்ந்த பிச்சை (60), பெருமாள் (50), சூர்யா (21), கரன் என்ற கர்ணன் (20), காஞ்சிமரத்துறையை சேர்ந்த மதி (45) ஆகிய 8 பேரும் சேர்ந்து கப்பாமடைபுலம் பகுதியில் மிளா மானை உருட்டு கட்டையால் தாக்கி வேட்டையாடியது தெரிய வந்தது. பின்பு அந்த பகுதியில் உள்ள வாழைத்தோப்பில் வைத்து மிளா மானின் உடலை வெட்டி இறைச்சியை மட்டும் வீட்டுக்கு கொண்டு வந்து சமைத்தது தெரிய வந்தது.

இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து கோபி, பிச்சை, பெருமாள், சூர்யா, மதி ஆகிய 5 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஜெகன், கர்ணன், அன்னக்கொடி ஆகிய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.