தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த விழாவில் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 63 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 32 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள பசுமை வீடுகள், சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள வீடுகள் மற்றும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை அமைச்சர் வழங்கினார்.
அரசு மகளிர் கல்லூரி
விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில், தமிழக அரசு ஏழை மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. வீடுகள் இல்லாத வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் வீடுகள் கட்டுவதற்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. காரிமங்கலம் ஒன்றியத்தில் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காரிமங்கலம் அருகே அரசு மகளிர் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள மாணவிகள் இங்கு தரமான உயர்கல்வியை பெற்று வருகின்றனர். இந்த ஒன்றியத்தில் 117 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
இந்த விழாவில் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ரங்கநாதன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் புஷ்பலதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், வடிவேலன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நாகராஜன், கூட்டுறவு சங்க தலைவர்கள் பழனிச்சாமி, சிற்றரசு, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோபால், முன்னாள் ஊராட்சி தலைவர் காவேரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.