சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் சிறுபான்மையினர் இனத்தைச் சார்ந்தவர்களின் பொருளாதார நிலையினை உயர்த்தும் நோக்கத்துடன் 201718ம் நிதியாண்டில் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் சிவகங்கை மாவட்டத்தில் கடனுதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. சில்லறை வியாபாரம் மற்றும் வியாபார அபிவிருத்தி, மரபு வழி சார்ந்த தொழில்கள், தொழில் மற்றும் தொழில் சேவை நிலையங்கள், இலகுரக போக்குவரத்து வாகனம், விவசாயம் தொடர்பான தொழில்கள் தொடங்க திட்டம்I மற்றும் திட்டம்II என இரண்டு வகைகளில் கடனுதவி வழங்கப்படும்.
சிறுபான்மையின சுயஉதவிக் குழுவினர் சிறு வியாபாரம், சிறு தொழில் செய்து தங்களது வருமானத்தை பெருக்கிக் கொள்ளும் வகையில் கடனுதவி வழங்கப்படுகிறது. இதற்கு சிறுபான்மையின மக்களின் ஆண்டு வருமானம் கிராமப்புறமாக இருந்தால் ரூ.81 ஆயிரமும், நகர்ப்புறமாயின் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். கல்விக்கடன், குறுகிய கால உயர்திறன் வளர்ச்சிப் படிப்பிற்கு திட்டம்I மற்றும் திட்டம்IIல் கல்விக்கடன் உதவி வழங்கப்படுகிறது. தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி, வேலைவாய்ப்பு படிப்புகளுக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வழங்கப்படும்.
இதேபோல் முதுகலை தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி படிப்புகளுக்கு ஆண்டிற்கு ரூ.3 லட்சம் வீதம் ரூ.9 லட்சம் வரை வழங்கப்படும். வெளிநாடுகளில் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி படிப்புகளுக்கு ஆண்டிற்கு ரூ.4 லட்சம் வீதம் ரூ.20 லட்சம் வரை வழங்கப்படும்.
மேலும் கறவை மாடுகள் வாங்கிட ஆவின் நிறுவனத்தின் மூலம் கடன் தொகை வழங்கப்படும். சிறுபான்மையினருக்கு சுயதொழில் தொடங்கிட தொழில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆட்டோ வழங்கப்படுகிறது. இக்கடன் தனிநபர் கடன் விதிமுறைகள் அடிப்படையில் தாய்கோ வங்கி மூலம் வழங்கப்படுகிறது. கடன் தொகையை உரிய வட்டியுடன் ஒவ்வொரு மாதமும் கூட்டுறவு வங்கி நிர்ணயிக்கும் தொகையை தவறாமல் 5 ஆண்டுகளுக்குள் செலுத்த வேண்டும்.
எனவே தகுதியுடையோர் கடன் விண்ணப்ப படிவங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் நகரக் கூட்டுறவு வங்கிகள் ஆகிய அலுவலகங்களில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் சாதி, வருமானம், இருப்பிடம் உள்ளிட்ட சான்றிதழ்கள், கடன் பெறும் தொழில் குறித்த விவரங்களை இணைத்து கொடுக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு மேற்கண்ட அலுவலகங்களையும், கூட்டுறவு வங்கிகளையும் தொடர்பு கொண்டு விவரங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.