மாவட்ட செய்திகள்

ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் இடத்தை பார்வையிட்ட மு.க.ஸ்டாலின்

வாணியம்பாடி அருகே ஆந்திர மாநிலம் கங்குந்தியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் இடத்தை பார்வையிட்ட மு.க.ஸ்டாலின் ஆந்திர மாநிலத்திடம் நமது உரிமைகளை தட்டிக்கேட்காமல் தமிழக அரசு குதிரைபேர ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறது என தமிழக அரசு மீது குற்றம்சாட்டினார்.

வாணியம்பாடி,

கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகும் பாலாறு, ஆந்திரா வழியாக வேலூர் மாவட்டத்துக்குள் நுழைந்து காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடலில் கலக்கிறது. ஆந்திர மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அந்த மாநில அரசு தடுப்பணைகளை ஏற்படுத்தியுள்ளதால் தமிழகத்துக்கு நீர்வரத்து முற்றிலும் நின்று விட்டது. குறிப்பாக அந்த மாநில முதல் - மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு சொந்தமான குப்பம் தொகுதியில் இருந்து வேலூர் மாவட்ட எல்லைப்பகுதியான வாணியம்பாடி வரை, பாலாற்றின் குறுக்கே 22 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் பல இடங்களில் தடுப்பணை கட்ட ஆந்திர மாநில அரசு முயற்சி செய்கிறது. இதனால் வேலூர், திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பாதிப்பு அடைவார்கள் என்பதால் ஆந்திர அரசை கண்டித்து தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை விவசாயிகளும், பல்வேறு அரசியல் கட்சியினரும் நடத்தி வருகின்றனர்.

மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்

இந்த நிலையில் தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆந்திர மாநிலம் கங்குந்தி அருகே பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணை மற்றும் உயர்மட்ட பாலத்தை பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

குப்பம் - கங்குந்தி இடையில் பாலாறு பாயும் ஒரு கிலோ மீட்டரில் உள்ள தரைப்பாலத்தை மாற்றி, ரூ.4 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிகளை ஆந்திர அரசு தொடங்கி இருப்பது வேதனைக்குரியது. ஏற்கனவே வேலூர், திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு பாலாறு மற்றும் கொசஸ்தலை ஆறுகள் மூலம் வரவேண்டிய தண்ணீர் தடுக்கப்பட்டு, பல தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை...

இதை எல்லாம் தட்டிகேட்டு நம் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசோ தங்களுடைய அரசை காப்பாற்றி கொள்ள குதிரைபேர ஆட்சியை நடத்திக்கொண்டு இருக்கிறது. இது உயர்மட்ட பாலம் என்று ஆந்திர மாநில அரசு தெவித்தாலும், வருங்காலத்தில் தடுப்பணையாக மாற்றப்படும் என்ற அச்சம் விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஆந்திர மாநில முதல் - மந்திரி சந்திரபாபு நாயுடு இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு இனியாவது விழித்துக்கொண்டு செயல்பட வேண்டும். மேலும் நதிநீர் பிரச்சினைகளை கண்காணித்து உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வகையில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கொண்ட நதிநீர் பாதுகாப்பு கமிட்டியை அமைக்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. எனவே, அந்த பணியை உடனடியாக மேற்கொண்டு இதுபோன்ற சூழ்நிலைகளை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.