நாமக்கல்,
நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று நாமக்கல்லில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் உடையவர் தலைமை தாங்கினார்.
இதில் மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான காந்திசெல்வன் கலந்து கொண்டு கூட்டபொருள் பற்றி விளக்கமாக பேசினார்.
பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு :-
மோகனூர் காவிரி ஆற்றில் ஒருவந்தூரில் இருந்து கரூர் மாவட்டம் நெரூர் - மல்லம்பாளையம் இடையே தடுப்பணை அமைக்க வேண்டும்.
இவ்வணை அமைப்பதால் நாமக்கல் மாவட்டத்தின் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்டு உள்ள நாமக்கல் நகராட்சி குடிநீர் திட்டம், பட்டணம், சீராப்பள்ளி கூட்டுக்குடிநீர் திட்டம், மோகனூர் பேரூராட்சி, மோகனூர் சுற்றுவட்டார ஊராட்சி குடிநீர் திட்டங்கள், நாமக்கல் கால்நடைக்கல்லூரி குடிநீர் திட்டம் போன்ற அனைத்து குடிநீர் திட்டங்களும் ஆண்டு முழுவதும் பயன்பெறும்.
மேலும் இந்த தடுப்பணை அமைவதால் காட்டுப்புத்தூர் பாசன வாய்க்கால் மற்றும் ஆயர்காட்டு பாசனம், நீரேற்று பாசன திட்டங்களும், 1 லட்சம் ஏக்கர் விவசாய நிலமும் பாசன வசதி பெறும். கோடை காலங்களில் நாமக்கல் மாவட்டம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத நிலை உருவாகும். எனவே அரசு உடனடியாக மோகனூர் காவிரி ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும்.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியல் சரியாக உள்ளதா? என சரிபார்ப்பதோடு, புதிய வாக்காளர்களை அதிக அளவில் சேர்ப்பது. நாமக்கல், ராசிபுரம் நகர தி.மு.க.வில் உள்ள அனைத்து வார்டுகளிலும் ஆய்வுக்கூட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பொன்னுசாமி, சரஸ்வதி, மாநில நிர்வாகிகள் நக்கீரன், ராணி, மாவட்ட துணை செயலாளர்கள் ராமலிங்கம், விமலா சிவக்குமார், பொருளாளர் செல்வம், ராசிபுரம் நகர செயலாளர் சங்கர், நாமக்கல் நகர பொறுப்பாளர் ராணா ஆனந்த் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.