தாளவாடி
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதன்படி தாளவாடியை அடுத்த ஆசனூர் அருகே உள்ள காரப்பள்ளம் சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையின்போது அந்த காரில் ரூ.92 ஆயிரத்து 300 இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து காரில் வந்தவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியை சேர்ந்த மதன்குமார் என்பதும், கர்நாடக மாநிலம் சிமோகா பகுதியில் கோழி விற்று அதற்குண்டான பணத்தை வசூல் செய்து கொண்டு வந்ததும், தெரியவந்தது. ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து தாளவாடி தாசில்தார் உமா மகேஸ்வரனிடம் ஒப்படைத்தனர்.