தலைப்புச் செய்திகள்

அமெரிக்காவில் 300 நகரங்களில் 10 லட்சம் பேர் திரண்டு போராட்டம்

கடந்த வாரத்தில் மினசோட்டாவில் உள்ள ஐஸ் அலுவலகம் முன்பு போராடிய அலெக்ஸ் பிரெட்டி என்பவர் அதிகாரிகளால் சுட்டு கொல்லப்பட்டார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக கடந்த ஆண்டு டிரம்ப் பதவியேற்றார். பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். உரிய ஆவணங்களும் இல்லாமல் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டுகாரர்களை கைது செய்து நாடு கடத்த உத்தரவிட்டார். இதற்காக குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கம் (ஐஸ்) என்ற புதிய துறையை ஏற்படுத்தினார்.

கடந்த ஆண்டில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர், பிரபலங்கள் உள்பட ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு நாடு முழுவதும் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. கடந்த வாரத்தில் மினசோட்டாவில் உள்ள ஐஸ் அலுவலகம் முன்பு போராடிய அலெக்ஸ் பிரெட்டி என்பவர் அதிகாரிகளால் சுட்டு கொல்லப்பட்டார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் வலுத்து வருகிறது. வார இறுதி நாளான நேற்று அமெரிக்காவின் நியூயார்க், வாஷிங்டன், சிகாகோ, பினீக்ஸ், சான் பிரான்சிஸ்கோ, பாஸ்டன் உள்பட 300-க்கும் மேற்பட்ட நகரங்களில் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது டிரம்புக்கு எதிராக அவர்கள் கோஷங்கள் போட்டும், பதாகைகளை ஏந்தி வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போரட்டத்தை ஒடுக்க போலீசார் குவிக்கப்பட்டனர். பல இடங்களில் போலீசார்- ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் கண்ணீர் புகைகுண்டுகள் வீசப்பட்டு கலைக்கப்பட்டனர். இதனால் அமெரிக்காவில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.